மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை: போதுமான இருப்பு உள்ளதாக அமைச்சர் உறுதி

புதுடெல்லி: ஈரான் – இஸ்ரேல் போர் நடைபெற்று வந்த நிலையில் ஈரான் மீது அமெரிக்கா நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் ஈரான் அணு மையம் மீது தாக்குதல் நடத்தியது. இதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலையிலும் திடீர் ஏற்றம் காணப்பட்டது. அதாவது, ஈரான் அணு மையம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதுமே, சர்வதேச சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் வரை அதிகரித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஸ்பாட் விலை நேற்று பேரல் 77.34 டாலர் என ஏற்றத்துடன் துவங்கியது. அதிகபட்சமாக 77.66 டாலர் வரை சென்றது. 74.51 டாலர் வரை குறைந்தது. இந்த திடீர் உயர்வால் இந்தியச் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை உயருமா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும், சர்வதேச சந்தையில் ஸ்பாட் விலையைப் பொறுத்தவரை கடந்த 52 வாரத்தில் ஒரு பேரல் அதிகபட்சமாக 87.95 டாலர் வரை உயர்ந்துள்ளது. ஆனாலும், இந்தியச் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

எனினும், அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை ரஷ்யா, ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. அமெரிக்கா தடை காரணமாக ஈராக்கில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில்லை. பெரும்பகுதி ரஷ்யாவில் இருந்து வாங்கப்படுகிறது. எனினும், 5ல் இரண்டு பங்கு கச்சா எண்ணெய் மேற்கண்ட நீரிணை வழியாக இந்தியாவுக்கு சப்ளை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமான என்பது குறித்து ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது: போர் பதற்றம் காரணமாகக் கச்சா எண்ணெய் சப்ளையில் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அதற்கேற்ப, உள்ளூர்ச் சந்தையில் எரிபொருள் சப்ளை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியாவுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக மிகக் குறைந்த அளவே கச்சா எண்ணெய் சப்ளை செய்யப்படுகிறது. மேலும், மத்தியக் கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை திடீரென நிகழ்ந்ததல்ல. ஹோர்முஸ் நீரிணை மூடப்படலாம் என்பதை எதிர்பார்த்து வேறு வழிகளில் கச்சா எண்ணெய் பெறுவதற்கான ஏற்பாடுகளில் அரசு ஆலோசித்து வருகிறது. இந்தியாவில் தினமும் 5.5 மில்லியன் கச்சா எண்ணெய் தேவைப்படுகிறது. இதில் 1.5 முதல் 2 மில்லியன் ஹோர்முஸ் நீரிணை வழியாக வருகிறது. இதர வழிகள் மூலமாக சுமார் 4 மில்லியன் பேரல்கள் இறக்குமதி செய்கிறோம். இந்திய பெட்ரோலிய நிறுவனங்களிடம் சுமார் மூன்று வாரங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது. இதர வழிகளில் மேலும் கச்சா எண்ணெய் பெற திட்டமிட்டு வருகிறோம். எனவே, அச்சப்படும் நிலை இல்லை என்றார்.

 

The post மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை: போதுமான இருப்பு உள்ளதாக அமைச்சர் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: