மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் கையெழுத்து தேவையில்லை : சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை : பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் மனைவி, கணவரின் கையெழுத்தைப் பெறுவது அவசியம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையை சேர்ந்தவர் ரேவதி. இவர் பாஸ்போர்ட் கோரி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பித்தார். ஆனால் கணவரின் கையெழுத்து பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுத்து பரிசீலனை செய்ய முடியும் என பாஸ்போர்ட் அதிகாரி கூறியுள்ளார். இதையடுத்து ரேவதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தனது கணவர் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளதால் கணவரின் கையெழுத்தை வற்புறுத்தாமல் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார்.இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, “பெண்ணின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளபோது கணவரிடம் கையெழுத்து பெற்று வருமாறு பாஸ்போர்ட் அதிகாரி கூறுவது சரியல்ல.ஏற்கனவே கணவன்- மனைவி உடனான உறவில் பிரச்சனை இருக்கும் நிலையில் கணவரிடம் இருந்து கையெழுத்து பெறுவது என்பது அந்த பெண்ணுக்கு இயலாத காரியம்.கணவரிடம் கையெழுத்து பெற வேண்டும் என வற்புறுத்துவதன் மூலம் ஒரு பெண்ணை கணவனின் உடமையாகக் கருதும் இந்த சமூகத்தின் மனப்பான்மையே மண்டல பாஸ்போர்ட் அதிகாரியின் செயல் காட்டுகிறது. திருமணம் ஆகிவிட்டால் ஒரு பெண் தனது அடையாளத்தை இழந்து விடுவதில்லை.எனவே, மனுதாரர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க கணவரின் கையெழுத்தைப் பெற வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறி அந்த பெண்ணுக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

The post மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் கையெழுத்து தேவையில்லை : சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: