சிறுவன் கடத்தல் வழக்கு.. ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய ஐகோர்ட் ஆணை: விசாரணைக்கு ஒத்துழைக்க ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி உத்தரவு..!!

சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனுஷ், தேனியை சேர்ந்த விஜயா ஸ்ரீ ஆகியோர் கடந்த மே மாதம் 15ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதல் திருமண பிரச்சனையால் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கேவி குப்பம் எம்.எல்.ஏ.வும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான பூவை ஜெகன் மூர்த்தி மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இன்று பிற்பகல் 2.30 மணிக்கு பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணைக்காக சட்டமன்ற உறுப்பினர் பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்கள். ஜாமீன் மீதான விசாரணை நடைபெற்றது. இதில், நீதிபதி பூவை ஜெகன்மூர்த்திக்கு சரமாரி கேள்விகளை எழுப்பினார். மக்கள் எதற்காக ஓட்டு போட்டார்கள் என்பதை மறந்து கட்டப் பஞ்சாயத்து செய்யலாமா?. விசாரிக்க வந்த போலீசாரை உங்கள் கட்சிக்காரர்கள் தடுப்பது ஏன்?. ROLE MODEL ஆக இருக்க வேண்டிய நீங்கள், ஏன் கட்டப் பஞ்சாயத்து செய்தீர்கள்? யார் உங்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது?. 200, 300 பேரை கூட்டி வந்தால் நீதிபதி பயந்துவிடுவார் என நினைக்காதீர்கள். விசாரணைக்கு ஒத்துழையுங்கள். நீதிமன்றம் நினைத்தால் 10 நிமிடத்தில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருக்க முடியும் என்றார்.

இதையடுத்து, இந்த வழக்கில், ஏன் ஏடிஜிபி மீது வழக்கு பதிவு செய்யவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் தவறு செய்யவில்லை என்றால், எதற்காக காவல்துறை விசாரணையை தடுத்தீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதி, தவறு செய்யவில்லை என்றால் அச்சம் இல்லாமல் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு தெரிவித்தது. தொடர்ந்து இந்த வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனை உடனடியாக கைது செய்து காவல் துறை பாதுகாப்பில் வைக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். ஆள் கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராமன் அரசு வாகனத்தை பயன்படுத்தியதாக காவல் துறை வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி ஐகோர்ட் வளாகத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார் ஏடிஜிபி ஜெயராமன். இந்த நிகழ்வால் ஐகோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

The post சிறுவன் கடத்தல் வழக்கு.. ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய ஐகோர்ட் ஆணை: விசாரணைக்கு ஒத்துழைக்க ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: