16 லட்சம் ஏக்கர் டெல்டா பாசனத்திற்காக கல்லணையை திறந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: மலர்தூவி சாகுபடி செழித்தோங்க வாழ்த்தினார்

தஞ்சாவூர்: தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நடப்பாண்டு குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் 16 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடிக்கு கல்லணையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தண்ணீர் திறந்து வைத்து, மலர், விதை நெல் தூவி சாகுபடி செழித்தோங்க வாழ்த்தினார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். பின்னர் தொடர்ந்து ஆறுகள், கிளை ஆறுகள், வாய்க்கால்கள் மூலம் சாகுபடி பணிகளுக்கு நீர் வழங்கப்பட்டு அறுவடை முடிவடைந்து ஜனவரி 28ம் தேதி அணை மூடப்படும். கர்நாடகா தமிழகத்திற்கு உரிய நீரை உரிய நேரத்தில் வழங்காத நிலையிலும் இயற்கையின் கருணையால் மழை பொழிந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் உள்ளது. இதனால் கடந்த ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட நெல் சாகுபடிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.

வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் மாலை திருச்சி மாவட்டம் முக்கொம்பிற்கு வந்தடைந்தது. அங்கு விவசாயிகள் பூக்கள் தூவி காவிரி அன்னையை வரவேற்றனர். தொடர்ந்து காவிரி தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு நேற்று வந்தடைந்தது. கல்லணைக்கு வந்த தண்ணீர் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடிக்கு, காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் இருந்து தண்ணீர் பிரித்து வழங்குவதற்கான நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து அங்கிருந்து மாலை கல்லணை வந்தார். தொடர்ந்து மங்கள இசை முழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை 6.11 மணிக்கு பொத்தானை அழுத்தி காவிரியில் தண்ணீரை திறந்து வைத்தார்.

தொடர்ந்து வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் விதை நெல்லையும், மலர்களையும் தூவி டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டில் சாகுபடி செழித்தோங்க வாழ்த்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, எஸ்.எஸ்.சிவசங்கர், மெய்யநாதன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கோவி.செழியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, முரசொலி, சுதா, எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி நீலமேகம், முன்னாள் ஒன்றிய அமைச்சர் பழனிமாணிக்கம், கலெக்டர்கள் பிரதீப் குமார் (திருச்சி), பிரியங்கா பங்கஜம் (தஞ்சை), காந்த் (மயிலாடுதுறை), கிரேஷ் பச்சாவ் (பெரம்பலூர்), ரத்தினசாமி (அரியலூர்), சிபி ஆதித்யா செந்தில்குமார் (கடலூர்), மற்றும் நீர்வளத்துறை, வேளாண்துறை, வருவாய்த்துறை உயர் அலுவலர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தந்தைக்குப் பின் தனயன்
23.6.1998ல் அப்போதைய முதல்வர் கலைஞர் கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து விட்டார். அதன் பிறகு 27 ஆண்டுகளுக்கு பின், கலைஞரின் மகன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டார். இதன் மூலம் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்ட 2வது முதல்வர் என்ற பெருமை மு.க.ஸ்டாலினை சேருகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி
காவிரி டெல்டா மாவட்டங்களில் வறட்சியின் பிடியால் வறண்டு போய் கிடக்கும் ஏரி, குளங்களில் நீரை நிரப்ப நீர்வளத் துறை அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுமார் 16 லட்சம் ஏக்கரில் நான்கு மாவட்டங்களிலும் நடப்பாண்டு குறுவை, சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பல கோடி ரூபாய் மதிப்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்கள் தூர் வாய்ப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தற்போது திறக்கப்படும் நீர் இவற்றின் வழியாக பாய்ந்து பயிர் சாகுபடிக்கு பயனளிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

1500 கன அடி தண்ணீர் திறப்பு
கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாற்றில் தலா வினாடிக்கு 1500 கன அடி வீதமும், கல்லணை கால்வாயில் 400 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 500 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடைமடை வரை தண்ணீர் போய் சேரும் வரை தொடர்ந்து மேற்கண்ட ஆறுகளில் தண்ணீர் வழங்கப்பட உள்ளது. அதன் பிறகு தண்ணீர் வரத்து, மழைப்பொழிவு, பாசன தேவை ஆகியவற்றை பொறுத்து முறை பாசனம் அமல்படுத்தப்பட உள்ளது.

The post 16 லட்சம் ஏக்கர் டெல்டா பாசனத்திற்காக கல்லணையை திறந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: மலர்தூவி சாகுபடி செழித்தோங்க வாழ்த்தினார் appeared first on Dinakaran.

Related Stories: