இந்நிலையில் ஆரம்பத்தில் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் ராமதாசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டு வந்தார். இதன் பிறகு அவர் அன்புமணி முகாமுக்கு தாவிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமதாஸ் தைலாபுரத்தில் பேட்டியளித்தபோது, ‘பாமக பொதுச்செயலாளரை காணவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை 5 ஸ்டார், 7 ஸ்டார் ஓட்டலில் பாரீன் சரக்கோடு அவர் இருக்கலாம். அவரை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.100 பரிசு வழங்கப்படும்’ என்று கூறியிருந்தார். இதற்கு அடுத்த நாள், ஒரு டீக்கடையில் அமர்ந்தவாறு, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் பேசும் வீடியோ வைரலானது.
அதில், ‘நாம் பல ஆண்டுகளாக கட்சியில் இருந்தும், தெருவோர டீக்கடையில் தான் டீ குடிக்கிறோம். ஸ்டார் ஓட்டலில் எப்படி தங்குவது. உண்மையான பாட்டாளியாக நாம் இருக்கிறோம்’ என்று கூறியிருந்தார். மேலும், அன்புமணியை சந்தித்த புகைப்படத்தையும் சமூக ஊடகத்தில் வெளியிட்டு இருந்தார். இதனால் கடும் கோபம் அடைந்த ராமதாஸ் அவரது பதவியை பறிக்க முடிவெடுத்து இருந்தார்.
இந்நிலையில், நேற்று நடந்த புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை தொடர்ந்து வடிவேல் ராவணனை நீக்கி விட்டு மாநில மாணவரணி செயலாளராக இருந்த முரளி சங்கரை பொதுச்செயலாளராக நியமித்து, தயார் நிலையில் இருந்த கடிதத்தையும் இந்த கூட்டத்திலேயே அவரிடம் வழங்கினார்.
பாமகவின் புதிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முரளிசங்கர், பாமகவின் மாநில மாணவரணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 2024 விழுப்புரம் (தனி) தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்டார். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இவர், கட்சி தலைமையின் உத்தரவுக்கிணங்க தொகுதி மாறி விழுப்புரத்தில் களமிறங்கினார்.
இத்தேர்தலில் டெபாசிட் இழந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட இவர் சொந்த ஊருக்கு சென்று கட்சிப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த 13ம் தேதி தனது மகள் செம்மலருடன் தைலாபுரம் வந்து ராமதாசை சந்தித்தார். அப்போதே இவர் பொதுச்செயலாளராக நியமிக்கப்படுவார் என கூறப்பட்டது. அதே போல இப்போது அவருக்கு இந்த பதவியை ராமதாஸ் வழங்கி உள்ளார்.
* கட்சி இரண்டாக செயல்படுவதுஉண்மைதான் -பு.தா.அருள்மொழி
மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி கூறுகையில், ‘கட்சி இப்போது இரு அணிகளாக தான் இருக்கிறது. அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இரு அணி இல்லை, ஒரு அணி தான் என்று நாங்க சொல்கிறோம். ராமதாஸ் தலைமையில் இருக்கிற அணி தான் ஒரே அணி. இதில் சில பேர் நாங்க தான் புது அணி அப்படின்னு சொல்லிக்கிட்டு வராங்க. கட்சி இரு பிரிவாக செயல்பட்டாலும் உடையவில்லை. நீங்கள் தான் அன்புமணி தலைமையில் ஒரு பிரிவு ராமதாஸ் தலைமையில் ஒரு பிரிவு என கூறுகிறீர்கள்.
இதை விட பெரிய பெரிய அளவில் பிளவு பட்ட கட்சிகள் எல்லாம் தேர்தல் நேரத்தில் ஒன்று கூடவில்லையா? வன்னியர் சங்கத்தில் எந்த பிரச்னையும் கிடையாது. கட்சியில் தான் பிரச்னை. கட்சியில் ராமதாஸ் போடும் பொறுப்புகள் தான் செல்லும். அவர் சொல்வது தான் செல்லும். இந்த ஆலோசனை கூட்டம் வழக்கமாக நடப்பது தான். இடஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆயத்தமாக வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க வலியுறுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இது தான் இந்த கூட்டத்தின் நோக்கம்’ என்றார்.
* தோட்டத்துக்கு வாங்க அன்புமணிக்கு அருள் எல்எல்ஏ அழைப்பு
தைலாபுரம் தோட்டத்தில் நேற்று சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் அளித்த பேட்டியில், கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளையும் ராமதாஸ் அறிமுகப்படுத்தி வைத்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 40 தொகுதிகளில் நாம் வென்றெடுக்க வேண்டும். கூட்டணி விஷயத்தை நான் பார்த்துக்கொள்கிறேன். நான் சொல்கிற பணிகளை நீங்கள் செய்ய வேண்டும் என கூறி 48 ஆண்டுகால அனுபவத்தை எடுத்துச்சொல்லி எப்படி செயலாற்ற வேண்டும் என சில வழிமுறைகளை எங்களுக்கு தந்திருக்கிறார்.
அதன்படி செயல்படுவோம். இன்று நடந்தது வடமாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம். நாளை (இன்று) தென் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். திருவள்ளூரில் நடந்த கூட்டத்தில் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று ராமதாசுக்கு அன்புமணி வேண்டுகோள் விடுத்திருப்பது குறித்து கேட்டபோது, முகத்தில் இரண்டு கண்ணும் இருந்தால் தான் அழகாக இருக்கும். ஒரு கண்ணை பிடிங்கினால் அது அழகில்லை.
ராமதாஸ் ஒரு கண், அன்புமணி ஒரு கண். இந்த இரண்டு கண்கள் ஒன்றாக இருந்தால் தான் எங்களுக்கெல்லாம் பெருமை. பேசியது மாதிரி நேரடியாக வந்து ராமதாசை பார்த்து இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டால் ஒன்றரை கோடி வன்னியர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்தில் இருக்கிற அனைத்து மக்களுக்கும் மகிழ்சியாக இருக்கும். வரும் தேர்தலில் கூட்டணி உறுதியாக உண்டு. 40 தொகுதிகளில் வெல்லும் அளவுக்கு வலிமையான கூட்டணியை நாங்கள் அமைப்போம் என்றார்.
* ராமதாசும் அன்புமணியும் மனம்விட்டு பேசினால் சுமூக தீர்வு கிடைக்கும்-ஜி.கே.மணி
பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பின் பேரில் தைலாபுரம் தோட்டத்திற்கு நேற்று வந்த கவுரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனக்கு ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லை. இதனால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். ஆனால் இன்று (நேற்று) ஞாயிற்றுக்கிழமை மருத்துவர்கள் வர மாட்டார்கள் என்பதால் கட்டாயம் கூட்டத்துக்கு வர வேண்டும் என்று ராமதாஸ் கூறியதால் இங்கு வந்துள்ளேன்.
ஒரு வாரத்திற்கு முன்பாக ராமதாஸ் சென்னைக்கு வந்திருந்தார். அங்கு நான் அவரை 3 மணி நேரம் சந்தித்து பேசினேன். ராமதாசின் இளைய மகள் கவிதா வீட்டில் தான் சந்தித்து பேசினோம். அப்போது வெளியே வந்து செய்தியாளர்களிடம், நல்ல தீர்வு வரும். ராமதாஸ் அறிவிப்பார் என்று சொன்னோம். அது போலவே அன்று மாலை ராமதாசும் ஒரு சுமுகமான தீர்வு வரும் என்று கூறியிருந்தார்.கட்சியில் கடந்த ஒரு வாரமாக நடக்கும் நிகழ்வுகள் கவலை அளிப்பதாக இருக்கிறது.
வருத்தம் அளிக்கக்கூடிய, வேதனை அளிக்கக் கூடிய செய்தியாக தான் இருக்கிறது. நாங்கள் எவ்வளவோ முயற்சி எடுத்தோம். காலம் தாழ்த்தாமல் தீர்வு காண முயற்சி செய்தோம். அது ஏனோ தெரியவில்லை காலம் தாழ்த்திக்கொண்டே இருக்கிறது. யார் என்ன சொன்னாலும், பேசினாலும் இருவரும் மனம் விட்டு பேச வேண்டும். அப்போதுதான் சுமூகமான தீர்வு ஏற்படும். இல்லையென்றால் நீண்டுகொண்டே தான் இருக்கும்.
காலம் தாழ்த்தாமல் மிகவிரைவில் இருவரும் சந்தித்து பேசி தீர்வுக்குவர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் மட்டுமல்ல, இயக்கத்தில் உள்ள எல்லோருடைய விருப்பம். ஏனென்றால் தேர்தல் வரக்கூடிய காலம். ஒற்றுமையாக இருந்து விரைந்து செயல்பட்டால் இயக்கத்தை பலப்படுத்தி வெற்றிக்கு மேலும் வலுசேர்க்க முடியும். கட்சியில் நடப்பதை நான் அதிகமாக சொல்லக்கூடாது. அது நன்றாக இருக்காது. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொன்னால் அது பெரிய விவகாரமாக சென்று விடும். இவ்வாறு அவர் கூறினார்.
The post அன்புமணி பக்கம் சாய்ந்த பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் நீக்கம்: புதிய பொதுச்செயலாளராக முரளி சங்கர்: ராமதாஸ் அதிரடி appeared first on Dinakaran.