நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உரிமம் இன்றி மெத்தனால், எத்தனால் விற்கப்படுகிறதா?

*மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை

பாவூர்சத்திரம் : நெல்லை மாவட்டத்திலுள்ள தனியார் நிறுவனங்களில் உரிமம் இல்லாமல் எத்தனால் மற்றும் மெத்தனால் வேதிப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என மதுவிலக்கு மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். நெல்லை மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு இணைந்து நெல்லை மாவட்டம் உத்தமபாண்டியன்குளம், வள்ளியூர், ராதாபுரம், மானூர் உள்ளிட்ட பகுதிகளில் உரிமம் இல்லாமல் எத்தனால் மற்றும் மெத்தனால் வேதிப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என பெயிண்ட் கடைகள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் திடீரென மதுவிலக்கு மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனை கடந்த ஒரு வாரமாக நடந்தது. நெல்லை மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி சந்திரன் தலைமையில் மத்திய நுண்ணறிவு பிரிவு ஏட்டு அருள்செல்வின் ஆகியோர் சோதனை நடத்தினர். மேலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எத்தனால் மற்றும் மெத்தனால் ஆகியவற்றை எவ்வித உரிமமும் இன்றி கள்ளத்தனமாக வைத்திருந்தாலோ விற்பனை செய்தாலோ சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பெயிண்ட் கடை உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

இதேபோல் தென்காசி மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் மெத்தனால் மற்றும் எத்தனால் போன்ற வேதிப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்ய கலால் துறை உத்தரவிட்டது. அதன் பேரில் தென்காசி மாவட்ட மதுவிலக்கு ஆய்வாளர் ஜெகதா, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு நுண்ணறி பிரிவு தலைமை காவலர் வெங்கடேஷ் தலைமையில் போலீசார் பாவூர்சத்திரம் அருகே பருத்திவிளையில் உள்ள தனியார் நிறுவனங்களில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது கொள்முதல் மற்றும் விற்பனை, இருப்பு பதிவுகள் உள்பட பல்வேறு ஆவணங்களை சரிபார்த்தனர்.

எத்தனால், மெத்தனால் கையாளப்படும் முறை சேமித்து வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். எத்தனால், மெத்தனால் ஆகியவற்றை எவ்வித உரிமம் இல்லாமல் நிறுவனத்தில் வைத்து விற்பனை செய்தாலோ, அல்லது இருப்பு வைத்திருந்தாலோ அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் எத்தனால், மெத்தனால் குறித்து ஏதேனும் பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் உடனடியாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு அல்லது போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

 

The post நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உரிமம் இன்றி மெத்தனால், எத்தனால் விற்கப்படுகிறதா? appeared first on Dinakaran.

Related Stories: