19 மாவட்டங்களில் 25 இடங்களில் ரூ.1,018 கோடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் 25 இடங்களில் ரூ.1,018 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னையில், மகப்பேறு மயக்கவியல் தர மேம்பாட்டிற்கான மருத்துவ பயிலரங்கத்ைத தொடங்கி வைத்து, மயக்கவியல் துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மகப்பேறு காலங்களில் தாய்மார்கள் மரணங்களை குறைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்ற 2021-22ல் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு தாய்மார்களின் இறப்பு விகிதம் 90.5ஆக இருந்தது. 2022-23ல் 52ஆக குறைந்தது. 2023-24ல் 45.5 என்கின்ற அளவில் குறைந்து, கடந்த ஆண்டு இன்னமும் சரிந்து 39.6 ஆக குறைந்திருக்கிறது. அதேபோல் குழந்தை மரண விகிதம் 1000 பிறப்புகளுக்கு 2021-22ல் 10.4ஆக இருந்தது. 2024-25ல் 7.4 ஆக குறைந்திருக்கிறது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் மகப்பேறு இறப்பு விகிதமும், குழந்தைகளுக்கான இறப்பு விகிதமும் வெகுவாக குறைந்து பூஜ்ஜிய நிலைக்கு செல்லும். கடந்த 3 மாதங்களுக்கு முன்னால் தமிழ்நாட்டில் இருந்த ஒட்டுமொத்த காலிப்பணியிடங்களை நிரப்பும் முயற்சியாக 2642 மருத்துவர் பணியிடங்கள் ஒரே நாளில் நிரப்பப்பட்டது. பணி ஆணைகள் தரப்படும்போது இந்தியாவில் முதன்முறையாக அவர்களுக்கு கலந்தாய்வு வைக்கப்பட்டு அவரவர் விரும்பும் இடங்களுக்கே பணிஆணைகள் தரப்பட்டது.

208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை முதல்வர் விரைவில் பயன்பாட்டிற்காக கொண்டு வருகிறார். அதோடு மட்டுமல்லாமல், ஒரே நேரத்தில் தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் 25 இடங்களில் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் கட்டும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கான பணியாளர்களை தேர்வு செய்து, இன்னும் 3 மாத காலங்களில் ரூ.1,018 கோடி செலவில் 25 இடங்களில் கட்டப்பட்டு வரும் இந்த மருத்துவமனைகளும் விரைவில் திறந்து வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post 19 மாவட்டங்களில் 25 இடங்களில் ரூ.1,018 கோடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: