இந்நிலையில் ஜெஇஇ மெயின், ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் 417 வது இடத்தில் தேர்ச்சி பெற்று சென்னை ஐ.ஐ.டி.யில் பயில தகுதி பெற்றார். மேலும் ஜெஇஇ அட்வான்ஸ்டு தொடர்பான கவுன்சிலிங்கிற்காக குமிழி ஏகலைவா உண்டி உறைவிட மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பழங்குடியினர் நலத்துறை மூலம் வாசுகி பவுண்டேசன் மூலம் நடத்தப்படும் உயர்கல்விக்கான பயிற்சி பெற்று வருகிறார். இவர், சென்னை ஐ.ஐ.டி.யில் விண்வெளி இன்ஜினியரிங் பாடப்பிரிவில் உயர்கல்வி பயில விருப்பம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவி ராஜேஸ்வரி சென்னை ஐ.ஐ.டி.யில் உயர்கல்வி பயில தகுதிப் பெற்றுள்ளதை அறிந்தவுடன், மாணவி ராஜேஸ்வரிக்கு எனது சல்யூட் என பாராட்டி, அவரது உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் என அறிவித்தார். தொடர்ந்து, முதல்வர் கடந்த 12ம் தேதி சேலம் மாவட்ட சுற்றுப் பயணத்தின் போது, மாணவி ராஜேஸ்வரியை நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்து, பழங்குடியினர் நலத்துறையின் தொல்குடித் திட்டத்தில் ரூ.5.73 லட்சம் மதிப்பிலான வீடு ஒதுக்கீடு ஆணையினையும், உயர்கல்வி பயில்வதற்கு உதவ ரூ.70,000 மதிப்பிலான மடிக்கணினியையும் வழங்கினார்.
இதற்கு, முதல்வருக்கு மாணவி ராஜேஸ்வரி நன்றி தெரிவித்தார். நான் ஐஐடியில் பயில தகுதி பெற்றுள்ளதையொட்டி முதல்வர் எனக்கு வாழ்த்து தெரிவித்து மேற்படிப்பிற்கான செலவுகளை அரசே ஏற்கும் என அறிவித்தார். எனது உயர்கல்விக்கு உதவிடும் வகையில் மடிக்கணினியினை வழங்கியுள்ளார். வீடு கட்டிக்கொடுப்பதற்கான ஆணையும் வழங்கியுள்ளார்.
நன்றாக பயின்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியில் சேர்ந்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் என இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். தந்தை இல்லாத எனக்கு முதல்வர் தந்தையாக நின்று, எனது உயர் கல்விச் செலவை ஏற்பதும், வீடு வழங்கியுள்ளதும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
The post தந்தை இல்லாத எனக்கு தந்தையாக உயர் கல்விச் செலவை ஏற்ற முதல்வருக்கு நன்றி: பழங்குடியின மாணவி நெகிழ்ச்சி appeared first on Dinakaran.