?குளிகையில் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?
– ஆதிகேசவன், தர்மபுரி.
குளிகை என்பது பெரும்பாலும்
சுபகாரியங்களைச் செய்வதற்கான நேரம் என்று சொல்வதைவிட, அசுபக் காரியங்களைச் செய்யக்கூடாத நேரம் என்று சொல்லலாம். காரணம், இந்த நேரத்தில் எதைச் செய்தாலும் அதை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டி இருக்கும் என்று பெரியவர்கள் சொல்லுகின்றார்கள். அதனால்தான் இறுதிச் சடங்கு போன்ற அபர காரியங்களை குளிகையில் செய்ய மாட்டார்கள். அதைப் போல கடன் வாங்குவது போன்ற காரியங்களையும் குளிகையில் செய்யக்கூடாது. கடன் வளரும்.
?பௌர்ணமி விரதத்தில் என்ன செய்ய வேண்டும்?
– மகாலட்சுமி, சென்னை.
நிறைமதி நாள் என்று சொல்லப்படும் பௌர்ணமி நேரம் வழிபாட்டுக்கு உரிய நேரம். நிலவை அடிப்படையாகக் கொண்ட இரண்டு திதிகள் முக்கியமானவை. ஒன்று அமாவாசை. தென் புலத்தார் வழிபாடு என்று சொல்லப்படும் பிதுர் காரியங்களைச் செய்வதற்கே ஒதுக்கப்பட்ட நாள். அதைப் போல, பௌர்ணமி தெய்வ பூஜையைச் செய்வதற்கு ஏற்ற நாள். குறிப்பாக சத்யநாராயண பூஜையைச் செய்வது விசேஷம். சூரிய நமஸ்காரம் செய்வது போல, முழு நிலவு நாளில் மொட்டை மாடி அல்லது திறந்த வெளியில் நின்று கொண்டு சந்திர நமஸ்காரம் செய்யலாம். சூரிய ஒளி போலவே சந்திரனுடைய ஒளியும் விசேஷமானது.
?எதைக் கைவிட்டால் வாழ்க்கையில் ஜெயிக்கலாம்?
– பாக்கிய சந்திரன், திருச்சி.
இரண்டு விஷயங்களைச் சேர விடாமல் தடுக்க வேண்டும். ஒன்று கோபம். அது நண்பர்களைவிட பகைவர்களைத்தான் பெற்றுத் தரும். முன்னேற்றத்தைத் தடுக்கும். நம்மைச் செயல்படவிடாமல் உணர்ச்சி வசப்பட வைத்து காரியத்தைக் கெடுத்துவிடும். அடுத்ததாக பொறாமை. பொறாமை உணர்வும் நம்முடைய மனதின் உற்சாகத்தைச் சீர்குலைத்துச் செயல்படாமல் செய்துவிடும். இந்த இரண்டையும் கைவிட வேண்டும். இல்லை எனில் அது நம்மை கைவிட்டுவிடும்.
?இன்னின்ன ராசிக்காரர்கள் இன்னின்ன கோயிலுக்குப் போகக் கூடாது என்பது ஜோதிடத்தில் இருக்கிறதா?
– கலியபெருமாள், மேல திருச்செந்தூர்.
ஜோதிடத்தில் இல்லை, சில ஜோதிடர் களிடம் இருக்கிறது. மக்களைக் கவர்வதற்காக அப்படி தாங்களே கண்டுபிடித்துச் சொல்கிறார்கள். யார் இதைச் சரிபார்ப்பது?
கோடிக்கணக்கான மக்கள் இருக்கும் சமுதாயத்தில், விரல்விட்டு எண்ணக்கூடிய சிலருக்கு சில விஷயங்கள் பலித்துவிட்டதால், அவைகளையே விதியாக மாற்றி அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். பலமுறை வேலைக்கான இன்டர்வியூக்கு சென்றவர் ஒருமுறை வந்து யோசனை கேட்டார்.
இந்த முறை எப்படியும் நான் வெற்றி பெற வேண்டும்? என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். இதுவரை நீங்கள் இன்டர்வியூக்குச் செல்லும் பொழுது என்ன வண்ண ஆடையை அணிந்து செல்வீர்கள்? என்று கேட்டேன். அவர் வெளிர் நீல ஆடையை அணிந்து செல்வேன் என்றார். வேறு என்ன நல்ல உடை உங்களிடம் இருக்கிறது?
என்றேன். இளம் பச்சையில் ஒரு சட்டை இருக்கிறது என்றார். உடனே நான் இந்த முறை இளம் பச்சை சட்டையை மூன்று முறை உதறி அணிந்து கொண்டு பூஜை அறைக்குச் சென்று வணங்கிவிட்டு, உங்கள் முன்னோர்கள் படத்துக்கு முன்னால் வணங்கிவிட்டு, வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களிடம் அட்சதை ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு செல்லுங்கள் வெற்றியடைவீர்கள் என்றேன்.
அவருக்கு அந்த இன்டர்வியூவில் வெற்றி கிடைத்துவிட்டது. மிகவும் மனத்தளர்ச்சி அடைந்த அவருக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக இந்த மாற்றத்தைச் சொன்னேன். அவர் நன்கு படித்திருந்தார். ஏற்கனவே பல இன்டர்வியூ அட்டென்ட் செய்த அனுபவமும் அவருக்கு இருந்தது. மனதில் நம்பிக்கை மட்டும் குறைவாக இருந்தது. சட்டை மாற்றுதல், தெய்வபக்தி, முன்னோர் பக்தி, மூத்தவர் பத்தி இவையெல்லாம் இணைந்து அவருக்கு ஒரு நம்பிக்கையும், உற்சாகமும் வந்தது இவைகளெல்லாம் பாசிட்டிவ்வாக வேலை செய்ய ஆரம்பித்ததால் அவருக்கு வேலை கிடைத்தது. இதில் எந்த சூட்சுமமும் எனக்குத் தெரியவில்லை. யாராவது ஜோதிடர்கள் கண்டு பிடித்து ஒரு புது விஷயத்தைச் சொன்னாலும் சொல்லலாம்.
?சில பரிகாரங்கள் வினோதமாக இருக்கிறது. இப்படி எல்லாம் சாஸ்திரத்தில் இருக்கிறதா?
– ரெங்கராஜன், ஸ்ரீ ரங்கம்.
சாஸ்திரத்தில் இருக்கிறதா இல்லையா என்று தேடினால் உங்களால் பதில் கண்டுபிடிக்க முடியாது. அனுபவத்தில் சொன்னதாகச் சிலர் சொல்கின்றார்கள். அதை சிலர் நம்புகின்றார்கள். நம்புங்கள். சாஸ்திரத்தைப் போட்டுக் குழப்பி விடை தேடாதீர்கள்.
?மரணத்தை கடந்த மனிதனின் வாழ்வு எப்படி இருக்கும்?
– கண்ணிகாபரமேஸ்வரி, நாகர்கோவில்.
இதே உடலோடு, இதே உலகில், ஆயிரம் ஆண்டு காலம் இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள். இத்தனை வருட வாழ்வு கடந்து வந்ததையும் நினைத்துக் கொள்ளுங்கள். ஆயிரக்கணக்கான வருடங்கள் இதே உடலோடு இந்த உலகில் இருப்பது எவ்வளவு சிரமம் என்று புரியும். மரணத்தை கடந்த வாழ்க்கையைப் பற்றி நம்முடைய சமய நூல்கள் சொல்லி இருக்கின்றன. அதைத் தான் விடுதலை மோட்சம் என்று சொன்னார்கள். மரணம் இல்லாப் பெருவாழ்வு என்று வள்ளலார் எதைச் சொல்லுகின்றார் என்பதைக் கொஞ்சம் யோசனை செய்யுங்கள்.
?மாதா, பிதா, குரு, தெய்வம் இந்த வரிசையின் பொருள் என்ன?
– குருராஜராவ், பட்டிணமருதூர் – தூத்துக்குடி.
கருவில் வளர்க்கிறாள் மாதா. உருவில் வளர்க்கிறார் பிதா. அறிவில் வளர்க்கிறார் குரு. இந்த மூன்றும் முறையாகிவிட்டால் தெய்வதரிசனம் தானே கிடைத்துவிடும். தெய்வம் பிரத்யட்சமாக (நேரடியாக) தெரிவது கிடையாது. ஆனால் மாதா, பிதா, குரு என அவர்களின் வடிவில் அவர் பிரத்யட்சமாக இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதனால்தான் தெய்வத்துக்கு நிகரான வழிபாட்டை இவர்களுக்குச் செய்யச் சொன்னார்கள் சான்றோர்கள்.
?வைணவத்தில் திருமலை நம்பிகளை பிரம்மாவுக்கு தாத்தா என்று ஒரு சொற்பொழிவில் கேட்டேன். எல்லோரையும் படைத்த பிரம்மாவுக்கு தாத்தா என்பது என்ன லாஜிக்?
– கலாமணி, தாம்பரம்.
இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் வைணவ மரபையும் அதில் சொல்லப்படும் சம்பவங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். ராமானுஜரின் குரு மற்றும் தாய்மாமாதான் பெரிய திருமலை நம்பிகள். அவர் ஆயிரத்து நூறு வருடங்களுக்கு முன்னால் திருமலையில் (அப்பொழுது திருமலை எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்) பெருமாளுக்கு திருமஞ்சன கைங்கரியம் செய்துகொண்டிருந்தார். ஆகாச கங்கையில் இருந்து தீர்த்தத்தைக் கொண்டு வந்து திருமஞ்சனம் சமர்ப்பிப்பார்.
ஒரு நாள் இவருக்குப் பின்னால் ஒரு சிறுவன் வேடத்தில் வந்த திருமலையப்பன், தாத (அப்பா) என்று அழைத்து அவரிடத்திலே திருமஞ்சன தீர்த்தத்தைப் பருகினான் என்கின்ற வரலாறு உண்டு. பெருமாள் அப்பா என்று அழைத்ததால், திருமலை நம்பிகள் பெருமாளுக்கு அப்பா ஆகிவிட்டார். எம்பெருமான் படைத்ததால் நான்முகன் பெருமாளுக்கு மகன் ஆகிறார். அப்படியானால் இயல்பாக பெரிய திருமலை நம்பிகள் அப்பாவுக்கு அப்பா என்கின்ற அடிப்படையில் தாத்தாவாகிறார். எனவே பிரம்மனுக்கு பிதாமகர் என்று அவரை வைணவ மரபில் கூறுவார்கள். அந்தப் பெரிய திருமலை நம்பிகள் வம்சத்தில் வந்தவர்களை ‘‘தாத்தாச்சாரியார்’’ என்று சொல்வார்கள். இதற்கு ஒரு ஸ்லோகம் உண்டு.
“பிதாமஹஸ்யாபி பிதாமஹாய
ப்ராசேதஸாதேசபலப்ரதாய!
ஸ்ரீ பாஷ்ய காரோத்தமதேசிகாய
ஸ்ரீ சைல பூர்ணாய நமோநம: ஸ்தாத்!!’’
(பிரமனுக்குத் தந்தையான திருவேங்கடமுடையானாலே ‘அப்பா’ என்று கூப்பிடப்பெறுகையாலே உலகிற்குப் பாட்டனான பிரம்மனுக்கும் பாட்டனாராய் ஸ்ரீ பாஷ்யகாரருக்குச் சிறந்த ஆசாரியராய் அவருக்கு வால்மீகியின் வாக்காகிற ஸ்ரீ ராமாயணத்தின் பொருள் உபதேசித்தவரான பெரிய திருமலை நம்பிக்குப் பலகால் வணக்கம்.)
?செவ்வரளிப் பூவை பெருமாளுக்குச் சாற்றலாமா?
– ஸ்ரீ நாத் சர்மா, வளசரவாக்கம் – சென்னை.
தாராளமாகச் சாற்றலாம். பிரச்னை என்னவென்றால், ஒரு மணி நேரம்கூட இந்தப் பூ தாங்காது. அதுவும் வெயில் காலத்தில் உடனே வாடிச் சுருங்கிவிடும். நிறம் மாறிவிடும். மற்றப் பூக்களுக்கு இடையில் வைத்து மாலை கட்டிச் சமர்ப்பிக்கலாம்.
?புத்தகங்கள் படிப்பதால் என்ன நன்மை?
– ஜி.வி.ராஜராஜன், மதுரை.
ஒரு நன்மையா? இரண்டு நன்மையா? புத்தகம் நம்மை புத்தாக்கம் (Refresh) செய்கிறது. சிந்திக்கச் செய்கிறது. புதிய பாதையைக் காட்டுகிறது. முடிவு எடுக்கும் யுக்திகளைக் கற்றுத் தருகிறது. புத்தகங்களை நாம் குனிந்து படிக்கிறோம். அது நம்மை நிமிர வைக்கிறது. இதைவிட வேற என்ன நன்மை வேண்டும்? வள்ளுவர் கற்க கசடற என்கிறார். நல்ல விஷயங்களைக் கற்க வேண்டும். அது நம்முடைய மனதின் மாசுகளை அழிக்கும்.
?பிறந்த நாளைக் கொண்டாடும் பொழுது நாம் என்ன நினைக்க வேண்டும்?
– கௌசிக், கிருஷ்ணன் கோவில்.
பொதுவாகவே நம்மிடம் உள்ள பொருள் சிறிது குறைந்தால், நாம் வருத்தப்படுகிறோம். ஆனால் பிறந்தநாள் கொண்டாடுகின்ற பொழுது நம்முடைய வாழ்வில் ஒரு வருடம் கழிகிறது. வருத்தப் படவில்லை என்றாலும்கூட, இத்தனைக் காலம் நாம் எதைச் செய்தோம், இனி இருக்கும் காலத்தில் பயனுள்ள படி என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
?யோசனை, மனக் குழப்பம் வேறுபாடு என்ன?
– வாரணி, புதுப்பாக்கம் – சென்னை.
ஒரு முறையோ இரண்டு முறையோ செய்தால் அதற்கு யோசனை என்ற பெயர். அதே வேலையாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தால், மனக்குழப்பம் என்ற பெயர். யோசனை செய்தால் செயல் வடிவம் பெறும். மனக்குழப்பம் வந்தால் கடைசி வரை செயல் நடக்காது.
?இப்படித்தான் சிந்திக்க வேண்டும் என்று முறை இருக்கிறதா?
– ரகு, விழுப்புரம்.
நிச்சயமாக இருக்கிறது. ஒரு விஷயத்தை நேர்மறையாகச் சிந்திப்பது எப்பொழுதும் நல்லது. என்ன இல்லை என்று நினைப் பதைவிட என்ன இருக்கிறது என்று நினைப்பது ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் தரும்.இதைப் புரிந்து கொள்வதற்கு ஒரு சின்ன உதாரணம். ஒரு தாத்தா தன் பேரனிடம் சொன்னார். இந்த ரப்பர் இருக்கிறதே, இது எதற்காக படைத்திருக்கிறார்கள் தெரியுமா? தவறு செய்பவர்களுக்குத் தான் இந்த ரப்பரை படைத்திருக்கிறார்கள்.
கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு பேரன் சொன்னான். அதை ஏன் தாத்தா அப்படி எடுத்துக் கொள்ள வேண்டும். தவறு செய்தாலும் அதைத் திருத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இதைக் கண்டுபிடித்து இருக்கலாம் அல்லவா என்றான். இதற்குத்தான் பாசிட்டிவ் அப்ரோச் என்று பெயர். இப்படி இருக்கிறவர்கள் எந்த விஷயத்திலும் தோல்வி அடைவதில்லை நிம்மதி இழப்பதில்லை.
?சிந்தனை எங்கே இருந்து வர வேண்டும்?
– கமலா சுந்தரேசன், சட்டநாதபுரம் – சீர்காழி.
உள்ளே இருந்து வரவேண்டும். மனதின் உள்ளே இருந்து வர வேண்டும். கல்விகூட அதற்குத்தான். புத்தகங்கள் படிப்பது அதிலுள்ள விஷயங்களை ஒப்பிப்பதற்காக அல்ல. படிப்பு என்பது தண்ணீர் வருவதற்காக குழாயில் கொஞ்சம் நீர் ஊற்றுகிறோம் அல்லவா அப்படித்தான். கொஞ்சம் நீர் ஊற்றினால் திரும்ப நிறைய நீர் உள்ளே இருந்து வர வேண்டும். ‘‘தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு” என்றார் வள்ளுவர். படிப்பு நம்முடைய சிந்தனையை, அறிவைத் தூண்ட வேண்டும்.
ஒரு முட்டை வெளியில் இருந்து உடைந்து போனால் அதன் கதை நொறுங்கிப் போய்விடும். ஆனால், உள்ளே இருந்து அதே முட்டை ஓடு வெடித்தால் புதிய குஞ்சு வெளியிலே வரும். இப்படி உள்ளே இருந்து வெளியே சிந்தனைகள் பீறிட்டு வரச் செய்வதற்குதான் படிப்பு என்று பெயர். படிப்பு என்பதற்கு கற்றல் (learning) என்ற பெயர். நம்மில் பெரும்பாலோர் கற்பதில்லை.
படிக்கிறார்கள் (Reading)
தொகுப்பு: தேஜஸ்வி
The post தெளிவு பெறுஓம் appeared first on Dinakaran.