புலனடக்கத்தை வலியுறுத்தாத ஆன்மிகம் உலகில் எங்கும் இல்லை. புலனடக்கம் என்பது ஐம்பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை அடக்கி ஆள்வதாகும். வள்ளுவரும் இந்தப் புலனடக்கத்தின் சிறப்பை, ‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து’ என்பார்.
இஸ்லாமியத் திருநெறி புலனடக்கம் பற்றி ஏராளமான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. மறுமை நாளன்று இறைவனின் நீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்காக மனிதர்கள் நிற்கும்போது அவர்களின் கை, கால்கள், தோல் அனைத்தும் தாம் என்ன செய்தோம் என்பதைக் கூறும் எனக் குறிப்பிடுகிறது குர்ஆன்.
ஐம்பொறிகளையும் நாம் எவ்வளவு கவனமாகக் கையாள வேண்டும் என்பதைத்தான் இது உணர்த்துகிறது.
நபிகளார்(ஸல்) ஒரு முறை, “யார் இரு தாடைகளுக்கு இடையிலுள்ளதையும் (நாவையும்) இரு தொடைகளுக்கு இடையிலுள்ளதையும் (வெட்கத்தலம்) பாதுகாப்பதாய் உறுதி தருகிறாரோ அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று கூறினார்.
உலக வாழ்வின் பெரும்பாலான சிக்கல்களுக்குக் காரணம் என்ன? தனிப்பட்ட மனிதர்களின் மோதல்களாகட்டும், குடும்பங்களின், தலைவர்களின், சமுதாயங்களின், நாடுகளின் இடையிலான மோதல்களாகட்டும் எல்லாப் பிரச்னைகளுக்கும் முதன்மைக் காரணம் இந்த இரண்டு உறுப்புகள்தாம். அதனால்தான் தம் நாவையும் கற்பையும் காப்பாற்றிக் கொள்பவர்களுக்கு சுவனம் கிடைக்கத் தாம் பொறுப்பேற்றுக் கொள்வதாக நபிகளார் கூறுகிறார்.
இன்னொரு முறை இறைத்தூதர், “எவர் இறைவனையும் மறுமையையும் ஏற்றுக் கொள்கிறாரோ அவர் பேசினால் நல்லவற்றையே பேசட்டும்; அல்லது மௌனமாக இருக்கட்டும்” என்று அறிவுறுத்தினார்.
“உங்கள்கண்கள் செய்யும் கள்ளத்தனங்கள் குறித்தும் இறைவனிடம் விசாரிக்கப்படுவீர்கள்” என்று நபிகளார் எச்சரித்தபோது, நபித்தோழர்கள் தம் பார்வையைப் பெரிதும் அக்கறையுடன் பேணிக் கொண்டார்கள். கண்கள் செய்யும் கள்ளத்தனங்கள் என்னென்ன என்று விளக்கவே தேவையில்லை; எல்லாரும் அறிந்த உண்மைகள்தாம் அவை.
ஐம்பொறிகளையும் அடக்கி ஆளத் தெரியாதவர்கள் விலங்கு போன்றவர்கள்; ஏன் அவற்றைவிடவும் தாழ்ந்தவர்கள் என்று கண்டிக்கிறான் இறைவன்.
“அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன; ஆயினும் அவற்றால் அவர்கள் சிந்திப்பதில்லை. அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றன; ஆயினும் அவற்றால் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் இருக்கின்றன; ஆயினும் அவற்றால் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள். ஏன், அவற்றைவிடவும் தாழ்ந்தவர்கள்.” (குர்ஆன் 7:179)
– சிராஜுல்ஹஸன்
இந்த வார சிந்தனை
“கண்களின் கள்ளத்தனங்களையும் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பவற்றையும் இறைவன் அறிகின்றான். மேலும் இறைவன் பாரபட்சமின்றித் துல்லியமாகத் தீர்ப்பு வழங்குவான்.” (குர்ஆன் 40:19)
The post புலனடக்கம் appeared first on Dinakaran.
