இந்த வார விசேஷங்கள்

26.7.2025 சனி
ஆடிப்பூர உற்சவத்தில் ஆண்டாள் மடி மீது ரங்கநாதர் சயனக்கோலம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் உற்சவத்தில் இன்று ஏழாம் திருநாள். காலையில் ஆண்டாளும், ரங்கமன்னாரும் தனித்தனியாக தோளுக்கினியானில் வலம் வருவார்கள். இரவு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகே உள்ள கிருஷ்ணன் கோயில் என்னுமிடத்தில் சயன சேவை நடைபெறும். இது வேறு எந்த ஆலயத்திலும் கிடையாது. ஆண்டாள் ஒரு காலை மடித்து ஒரு காலைத் தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் அற்புதமான அலங்காரத் துடன் காட்சி தர, ஆண்டாளின் திருமடியில் ரங்கமன்னார் தலை சாய்த்து உறங்குவது போல காட்சியளிக்கும் சேவை மிக மிக அற்புதமானது. அரங்கமடி சேவை என்று இதற்கு பெயர். இக் காட்சியை தரிசிக்க கூட்டம் அலை அலையாய் திரளும். நாளை எட்டாம் நாள் இரவில் ஆண்டாள் புஷ்ப பல்லக்கில் எழுந்தருள, ரங்கமன்னார் குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார் அப்போது நடைபெறும் வையாளி சேவை மிக அற்புதமாக இருக்கும்.

27.7.2025 ஞாயிறு
சொர்ண கௌரி விரதம்

சொர்ண கௌரி விரதம் என்பது பார்வதி தேவியை பொன் மயமானவளாக பாவித்து வணங்கும் ஒரு விரதமாகும். இந்த விரதத்தை அனுசரிப்பதன் மூலம், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி செல்வச் செழிப்பு ஓங்கும். திருமணத்தடை நீங்கும். இந்த விரதத்தை பெண்கள் தங்கள் கணவன்மார்களின் நலனுக்காகவும் அனுசரிக்கிறார்கள். குறிப்பாக, திருமணத்தடை உள்ள பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் திருமண யோகம் கைகூடும் என்று நம்புகிறார்கள். அதிகாலையில் நீராடி, அம்பிகையை பொன் மயமானவளாக பாவித்து பூஜைகள் செய்ய வேண்டும். மஞ்சள், குங்குமம், மலர்கள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட கலசத்தை வைத்து, அதில் அம்பிகையை ஆவாகனம் செய்து வழிபட வேண்டும். கௌரி மந்திரங்களை உச்சரித்து, அம்பிகையை துதித்து விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருந்து, இரவில் பால் மற்றும் பழங்களை உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் சுக்கிர தோஷம் நீங்கும் என கூறப்படுகிறது. ஏனெனில், சொர்ண கௌரி விரதம் சுக்கிர பகவானின் தோஷத்தை போக்கும் பரிகாரமாகவும் கருதப்படுகிறது.

28.7.2025 திங்கள்
திரு ஆடிப்பூரம்

பொதுவாக ஆடி மாதம் அம்பாளுக்கு உரிய மாதமாகும். அதிலும் பூர நட்சத்திரம் மிக மிகச் சிறப்பானது. அது அம்பாள் வழிபாட்டுக்குரிய மிக விசேஷ தினம். அந்த நாளில் தான் உமாதேவி அவதரித்ததாக சைவப் புராணங்கள் கூறுகின்றன. உலகை உய்விக்க வந்த ஆண்டாள் அவதாரம் செய்த நாளாகவும் அந்த நாள் குறிப்பிடப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் அன்று தேர்த்திருவிழா கோலாகலமாக நடக்கும். அமாவாசைக்கு அடுத்து வரும் இந்த ஆடிப்பூர நட்சத்திர விழாவில் சித்தர்களும் தம்முடைய தவத்தை தொடங்குகின்றனர். பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக வாழவும் கல்யாண வரம் வேண்டியும் அம்மனிடத்தில் ஆசீர்வாதம் வேண்டுகின்றனர், அன்றைய தினம் ஏழைப்பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு முதலியவற்றை அளிப்பது மிகுந்த நன்மையைத் தரும். அம்மனை, தாயாக பாவித்து அவளுக்கு கண்ணாடி வளையல்கள் அணிவித்து, வளைகாப்பு விழா பல அம்மன் கோயில்களில் கொண்டாடப்படுகிறது. கர்ப்பிணிகள் அன்றைய நாள், வளையல் சாத்தி வழிபட்டால் சுகப்பிரசவம் நேரும். திருமணத் தடை உள்ள கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவன் கிடைப்பார். அங்கு பிரசாதமாக கிடைக்கும் வளையல்களை அணிந்து கொண்டால் குழந்தை இல்லாத பெண்களுக்கு சீக்கிரம் குழந்தைகள் பிறப் பார்கள் என்பது நம்பிக்கை.

28.7.2025 திங்கள்
திருச்சி அரசனூர்

100 தடா அக்கார அடிசில் அரசலூர் நவநீதகிருஷ்ணபெருமாள் கோயில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் வட்டத்தில் உள்ள அரசலூரில் அமைந்துள்ளது. இங்கு நவநீத கிருஷ்ணர் குழந்தை வடிவில் வெண்ணெய் ஏந்தியபடி காட்சி தருகிறார். கோயிலின் வரலாற்றுப் பெயர் அஸ்வத ராஜபுரம், நவநீத கிருஷ்ணர் கல்கி அவதாரம் எடுப்பதாக நம்பப்படுவதால், அஸ்வதவூர் என்று அழைக்கப்பட்டு பின்னர் அரசலூர் என்று ஆனது. இந்த கோயிலில் ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்ரீவர் ஆகியோரும் உள்ளனர். ‘‘இந்த கோயிலில் ஆடிப்பூரம் முன்னிட்டு 100 தடா அக்கார அடிசில்’’ நூறு பாத்திரங்களில் சமர்ப்பிக்கப்படுகிறது.

28.7.2025 திங்கள் காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் ஆடிப்பூர திருக்கல்யாணம்

திவ்ய தேசங்களில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் ‘பெருமாள் கோயில்’ என்று அழைக்கப்படுகிறது. வைணவர்களுக்கு மிகவும் புனிதமான தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு ஆடிப்பூரத்தை ஒட்டி பெருமாளுக்கும்ஆண்டாளுக்கும் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெறும். பெரும்பாலான பெருமாள் கோயில்களில் இன்றைய தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

28.7.2025 திங்கள்
நாக சதுர்த்தி

ஆடி அல்லது ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியே நாக சதுர்த்தி என்று கொண்டாடுகிறோம். பொதுவாக சதுர்த்தி நாள் விநாயகருக்கு உரியது என்றாலும் இந்தக் குறிப்பிட்ட சதுர்த்தியை நாகங்களுக்கு உரிய நாளாக கொண்டாடுகின்றனர். இதன் பின்னணியில் ஒரு கதை உண்டு. ஒருமுறை காட்டில் ஒரு பையனை நாகம் தீண்டியது. அவன் இறந்து போனான். அதைக் கண்டு அவனுடைய சகோதரி துடித் தாள். தன்னுடைய சகோதரனுக்கு உயிர் தரும்படி அவள் நாகராஜனை வேண்டிக் கொண்டாள். அதற்காக விரதம் இருந்தாள். அந்த விரதத்தின் பயனாக அந்தப் பெண்ணின் சகோதரன் மறுபடியும் உயிர் பெற்றான். அந்த நாள்தான் நாக சதுர்த்தியாகக் கொண்டாடுகின்றனர். இது பல பகுதிகளில் கொண்டாடப்படும் ஒரு விழா. நம்மூரில் பெண்கள் நாக பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் வழிபாடு நடத்துகின்றனர் அல்லது அம்மன் கோயிலில் பாம்பு புற்றுக்கு படையல், பூஜை செய்து வழிபடுகின்றனர். கர்நாடக மாநிலத்தில் மற்றும் வடமாநிலங்களில் இது மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாகத்திற்கு என்று சில கோயில்கள் உள்ளன. தெற்கே நாகர்கோவில் என்ற ஒரு ஊர் உண்டு. நாகப்பட்டினத்திலும் கும்பகோணத்திலும் நாகநாதர் கோயில்கள் உண்டு. அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பொதுவாகவே ஜாதகங்களில் ராகு-கேது எனும் சர்ப்ப கிரகங்களால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் தாமதப்படுகிறவர்கள், நாக வழிபாடு செய்வது அவசியம். அரச மரத்தடி, வேப்ப அல்லது ஆலமரத் தடியில் உள்ள நாகப்பிம்பங்களுக்கு பால் அபிஷேகம் செய்து புதிய வஸ்திரம் கட்டி பூஜை செய்யலாம். திருப்புல்லாணி, ஸ்ரீமுஷ்ணம் போன்ற தலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.

29.7.2025 செவ்வாய்
கருட பஞ்சமி, நாக பஞ்சமி

ஆடி அமாவாசைக்கு அடுத்து வருகின்ற ஐந்தாவது திதி பஞ்சமி திதி. இந்த பஞ்சமி திதியை கருட பஞ்சமி என்று கொண்டாடுகின்றனர். இது கருடனின் ஜெயந்தி விழாவாக பல வைணவக் கோயில்களில் கொண்டாடப்படுகிறது. கருடன் எம்பெருமானுடைய வாகனம். கருட சேவை விழா என்பது பெரும் பாலான பெருமாள் கோயில்களிலும் நடக்கக்கூடிய பிரசித்தி பெற்ற விழா. ஒரு பிரம்மோற்சவத்தில் கருட சேவை விழாவை தரிசிப்பது மிகப்பெரிய பாக்கியம். உயரே வானத்தில் வட்டமிடும் கருட தரிசனம் பாவங்களை தொலைத்து புண்ணியங்களைத் தந்து எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றி வைக்கும். கருட பஞ்சமி அன்று பெருமாள் கோயில்களில் நடைபெறும் வழிபாட்டில் கலந்து கொண்டால் நல்ல வாழ்க்கை கிடைக்கும். இதே நாள் நாகபஞ்சமி நாளாகவும் இருப்பதால் நாகர்களின் தலைவனான ஆதிசேஷனுக்கு பூஜை செய்வதும் நடைபெறும். எதிரெதிர் விஷயங்களானகருடன், பாம்பு இந்த இரண்டையும் ஒரே பஞ்சமி நாளில் வணங்குகின்ற பொழுது, பகை கொண்ட உள்ளங்கள் மாறும். நட்பு பிறக்கும். குடும்பத்தில் சந்தோஷம், குதூகலம் நிலவும். கருத்து வேறுபாடுகள் மறையும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் இந்த தினத்தில் அவசியம் நாக பஞ்சமி மற்றும் கருட பஞ்சமி பூஜைகளில் கலந்து கொள்வதால் நட்பு பலப்பட்டு கூட்டுத் தொழில் விருத்தியாகும். கருட பஞ்சமி அன்று சொல்வதற்கென்றே சில மந்திரங்களும் ஸ்லோகங்களும் உண்டு. குறிப்பாக இன்றைக்கும் கருட பத்து என்கின்ற ஒரு பாடலை மனப்பாடமாக கிராமத்து மக்கள் சொல்வது வழக்கம். கருடனை வணங்குவதன் மூலமாக கண் திருஷ்டி மற்றும் துஷ்ட சக்திகளின் ஆதிக்கம் குறையும். ஐஸ்வர்யம் பெருகும்.

31.7.2025 வியாழன்
பெருமிழலைக் குறும்பர் குருபூஜை

பெருமிழலைக் குறும்ப நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சோழநாட்டின் பெருமிழலை என்னும் ஊரின் தலைவராய் விளங்கியவர். ‘‘பெருமிழலைக் குறும்பர்க்கும் அடியேன்’’ – என்ற சுந்தரரின் திருத்தொண்டத் தொகையிலிருந்து இவர் தம் பெருமையை நாம் புரிந்து கொள்ளலாம். சிவனடியார்களை தொழுவதே, சிவனைத் தொழுவது என்பது சைவத்தின் உயிர்நாடி. எனவே தொண்டர் தம் பெருமையை எப்பொழுதும் போற்றியவர். சிவனடியார்களுக்குத் தொண்டு செய்வதையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவர், சிவபெருமானின் திருவைந் தெழுத்தினை இடைவிடாது நினைந்து போற்றியவர். இவ்வாறு சிவபக்தியிலும், சிவனடியார் பக்தியிலும் சிறந்து வாழும் வேலையில் சில சிவனடியார்கள் மூலம் திருத்தொண்டத்தொகை பாடிய நம்பியாரூரர் பெருமையைக் கேள்வியுற்றார். அவரைச் சந்திக்க வேண்டும் அவருடைய திருவடிகளைத் தொழ வேண்டும் என்ற விருப்பம் கொண்டார். அவர் திருப்பெயரை உச்சரிக்காமல் எந்த வேலையும் செய்வதில்லை. தன் மனக்கண்ணில் சுந்தரமூர்த்தி நாயனாரை நினைத்து வழுத்தினார். சுந்தரமூர்த்தி நாயனார் திருவஞ்சைக்களத்தில் திருப்பதிகம் பாட, அவருக்குச் சிவபெருமான் அருளால், வடகயிலை அடையும் பேறு மறுநாள் கிடைக்க இருப்பதனைத் தம்முடைய ஊரில் இருந்து கொண்டே யோகக் காட்சியால் அறிந்து கொண்டார். தன்னுடைய குருவான சுந்தர மூர்த்தி நாயனார் திருக்கயிலாயம் சென்று அடைவதற்கு முன்னர், தம்முடைய உடலை இங்கேயே உதிர்த்து விட்டு, யோக சக்தியால் ஒரு நாள் முன்னதாகவே, அவரை எதிர்கொண்டு அழைக்க, சிவபதம் அடைந்தார். அவருடைய குருபூஜை தினம் ஆடி மாதம் சித்திரை. (இன்று)

 

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Related Stories: