நீலகிரி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் பணி செய்தால் சைல்டு லைனில் புகார் தெரிவிக்கலாம்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் பணியமர்த்தப்படுவது கண்டறியப்பட்டால் சைல்டு லைனை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஊட்டி பிங்கர்போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் இந்திய அரசியலமைப்பு விதிகளின் படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை ஒரு போதும் எந்த வித பணிகளிலும் ஈடுபடுத்தக்கூடாது.

அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிக்க வேண்டும். குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற முயற்சிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது.

முன்னதாக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கம் நடந்தது.
14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பணியில் ஈடுபடுத்துவது மற்றும் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் அமர்த்துவது குற்றமாகும்.

அவ்வாறு குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் உரிமையாளருக்கு அபராதமாக ரூ.20 ஆயிரத்திற்கு குறையாமலும், அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரையிலும், குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு குறையாமலும், அதிகபட்சமாக இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவது கண்டறியப்பட்டால் www.pencil.gov.in என்ற இணையதளம் அல்லது தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் 0423-2232108, சைல்டு லைன் 1098 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) தாமரை மணாளன், சமூக பாதுகாப்புத்திட்டம் தனித்துணை ஆட்சியர் ராதாகிருஷ்ணன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ் கண்ணன் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post நீலகிரி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் பணி செய்தால் சைல்டு லைனில் புகார் தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: