களக்காடு : களக்காட்டில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க 2 இடங்களில் புறவழிச்சாலை அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.களக்காட்டை சுற்றி 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராம மக்கள் கல்வி, மருத்துவம், வணிகம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காகவும், வெளியூர்களுக்கு செல்லவும் களக்காட்டிற்கு தான் வர வேண்டியதுள்ளது. இதனால் களக்காடு சாலைகளில் எப்போதும் வாகன போக்குவரத்து காணப்படும்.
அதுபோல மக்கள் கூட்டமும் தென்படும். களக்காடு பழைய பஸ்நிலைய அண்ணா சாலை, காமராஜர் சிலை, கோவில்பத்து, நாங்குநேரி ரோடு, புதிய பஸ்நிலைய சாலைகள் எந்த நேரமும் பிசியாகவே இருக்கும். நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் களக்காட்டில் அதுக்கேற்றால் போல் சாலை வசதி இல்லை.
களக்காடு சாலைகள் குறுகியதாகவே உள்ளது. குறிப்பாக களக்காடு பழைய பஸ்நிலைய அண்ணா சாலை குறுகியதாக இருப்பதாலும் இருபுறங்களில் கடைகள் இருப்பதாலும் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
காலை மற்றும் மாலை நேரங்களில் களக்காட்டில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தென்காசி-நாகர்கோவில் பிரதான சாலையில் களக்காடு அமைந்துள்ளதால் வெளியூர் செல்லும் வாகனங்களும் களக்காடு அண்ணா சாலை வழியாகவே பயணிக்க வேண்டியதுள்ளதால் வெளியூர் பயணிகளும் போக்குவரத்து நெருக்கடியால் சிக்கி திணறி வருகின்றனர். இதனை தவிர்க்க களக்காட்டில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வெளியூர் செல்லும் வாகனங்கள் களக்காட்டிற்குள் வராமல் நாகன்குளம், படலையார்குளம், கோவில்பத்து வழியாக செல்ல புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுநல அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதுபோல களக்காடு புதிய பஸ்நிலையத்தில் இருந்து ஊருக்குள் செல்லும் கோட்டை ஜவகர் வீதி சாலையும் மிக குறுகியதாக இருப்பதால் அங்கும் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
பள்ளி நேரங்களில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கோட்டை சாலையை கடந்து செல்வதற்கு நீண்ட நேரமாகி விடுகிறது. இதனை தடுக்க களக்காடு புதிய பஸ்நிலையத்தில் இருந்து உப்பாற்றின் மீது பாலம் அமைத்து, சத்தியவாகீஸ்வரர் கோயில் முன்புறம் வழியாக சாலை அமைக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.
எனவே களக்காட்டில் பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் ஆகிய 2 இடங்களில் புறவழிச்சாலைகள் அமைக்க இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post களக்காட்டில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க 2 இடங்களில் புறவழிச்சாலைகள் அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.