ஈரோடு : ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்ததால், மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஈரோட்டில் 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட கனிராவுத்தர் குளம் உள்ளது. மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்குளம் தனியார் நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது.
மாநகரின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக இந்த குளம் உள்ளது. இந்நிலையில், நேற்று காலையில் குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்த நிலையில், கடும் துர்நாற்றம் வீசியது. இதனால், நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “ ஈரோட்டில் நேற்று முன்தினம் பெய்த மழையை பயன்படுத்தி, கனிராவுத்தர் குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய பட்டறைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே, குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன. எனவே, மீன்களின் இறப்பிற்கான காரணத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பங்கள் நடைபெறாமல இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
அதனைத்தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சி மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, செத்து மிதக்கும் மீன்களை அகற்றி, சுத்தப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.ஆய்வின் போது, சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என பலர் உடனிருந்தனர்.
The post சாயக்கழிவுநீர் கலப்பால் கனிராவுத்தர் குளத்தில் செத்து மிதந்த மீன்கள் appeared first on Dinakaran.