குளித்தலை, ஜூன் 13: கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி 2 வார்டு மணத்தட்டையில் திருச்சி- கரூர் நெடுஞ்சாலை அருகே கூரை வீட்டில் வசித்து வருபவர் கோபால் (65). ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக டிரைவர். இவரது வீட்டின் அருகில் அவருக்கு சொந்தமான கூரை வீடு உள்ளது. இந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. இந்நிலையில் நேற்று மதியம் பலத்த காற்று வீசியது. அப்போது மின் கம்பி உரசியதால் தீப்பொறி பட்டு கோபாலுக்கு சொந்தமான கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.
உடனடியாக கோபால் மற்றும் 2வது வார்டு திமுக கவுன்சிலர் பந்தல் சந்துரு மற்றும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காற்றின் வேகத்தால் தொடர்ந்து தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை சப் இன்ஸ்பெக்டர் சரவணகிரி மற்றும் போலீசார் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
முசிறி தீயணைப்புநிலையத்திலிருந்து தீயணைப்பு வண்டியில் வந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை ணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரைமணிநேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் கூரை வீட்டிலிருந்த பொருட்கள் எரிந்து சேதமானது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
The post குளித்தலையில் மின்கம்பி உரசியதில் கூரை வீட்டில் தீ விபத்து appeared first on Dinakaran.