இதையடுத்து கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வருகிற 14 மற்றும் 15ம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 16ம் தேதி வரை கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனையடுத்து இந்த 7 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து கோவை, நீலகிரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து கோவை மற்றும் நீலகிரிக்கு இன்று தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் வருகை தர உள்ளனர்.
அதன்படி கோவை மாவட்டத்திற்கு ஒரு தேசிய பேரிடர் மீட்பு படையினர், 2 மாநில பேரிடர் மீட்பு படையினர் வர உள்ளனர். முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வதற்காக 60 பேர் கொண்ட குழுக்கள் மீட்பு உபகரணங்களுடன் களத்தில் உள்ளன. இவர்கள் இன்று கோவை வந்து, அங்கிருந்து அதிக மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதியான வால்பாறைக்கு செல்கின்றனர். இதேபோல் 2 மாநில பேரிடர் மீட்பு படையினர் மதியம் கோவைக்கு வருகை தர உள்ளனர். இவர்கள் மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
The post மிக கனமழைகான எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்: நீலகிரி, கோவைக்கு விரைந்த பேரிடர் மீட்பு குழுக்கள்!! appeared first on Dinakaran.