மாணவர்களின் தாயார் கணக்குகளில் ரூ.15,000: ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் புதிய திட்டம் அமல்!!

அமராவதி: ஆந்திர பிரதேசத்தில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாயார் வங்கிக் கணக்குகளில் கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ.15,000 செலுத்தும் புதிய திட்டம் அமலுக்கு வந்தது. ஆந்திராவில் தெலுங்கு தேசம்-பாஜக-ஜனசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பதவி வகிக்கிறார். இந்த கூட்டணி அரசு ஓராண்டை நிறைவு செய்துள்ளது.

தேர்தலின்போது இக்கூட்டணி சார்பில் `சூப்பர் சிக்ஸ்’ என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. அவற்றை ஒவ்வொன்றாக சந்திரபாபு நாயுடு அரசு அமல்படுத்தி வருகிறது. ஏற்கெனவே அண்ணா கேன்டீன், ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள் திட்டம் போன்றவை அமல்படுத்தப்பட்டது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டமும் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ‘சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் அறிவித்த மற்றொரு வாக்குறுதி இன்று முதல் அமலுக்கு வரும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. ஆந்திர அரசு ‘தல்லிக்கு (தாய்) வந்தனம்’ என்ற பெயரில் புதிய திட்டத்தை இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது. இதன்படி, 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.15,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான தொகை மாணவர்களின் தாயார் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 67 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாணவர்களின் தாயார் கணக்குகளில் ரூ.15,000: ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் புதிய திட்டம் அமல்!! appeared first on Dinakaran.

Related Stories: