ஆபரேஷன் கஞ்சா வேட்டை தீவிரம்; 5 மாதங்களில் 476 பேர் அதிரடி கைது: போலீஸ் நடவடிக்கைக்கு சிவகாசி மக்கள் பாராட்டு

சிவகாசி, ஜூன் 12: சிவகாசி உட்கோட்டத்தில் போலீசார் நடத்தி வரும் ஆபரேஷன் கஞ்சா வேட்டைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சிவகாசி உட்கோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக போதைப் பொருட்களின் விநியோகம் நடைபெறுவதாக புகார் எழுந்தது. போதை பழக்கம், குற்றச்செயல்கள் அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க வேண்டும் என போலீசாருக்கு மாவட்ட எஸ்பி கண்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து சிவகாசி உட்கோட்டத்தில் டிஎஸ்பி பாஸ்கர் உத்தரவின் பேரில் கஞ்சா, புகையிலை விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் உட்கோட்டம் முழுவதிலும் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கஞ்சா வியாபாரிகள், புகையிலை வியாபாரிகளை தனிப்படை போலீசார் கண்காணித்து தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். போதைக்கு அடிமையாகி உள்ள இளைஞர்கள், குற்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்களையும் தனிப்படை போலீசார் கண்காணித்து கைது செய்து வருகின்றனர்.

இதனால் சிவகாசி உட்கோட்டத்தில் கடந்த சில மாதங்களாக குற்ற சம்பவங்கள் குறைந்து வருகின்றது. தொடர்ந்து ரோந்து பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.டிஎஸ்பி பாஸ்கர் கூறும்போது, கடந்த 5 மாதங்களில் மட்டும் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 34 கஞ்சா விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போன்று தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 282 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை நடந்த சாலை விபத்தில் 23 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். 71 பேர் காயம் அடைந்துள்ளனர். உரிய ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகிறது. விபத்துக்களை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

The post ஆபரேஷன் கஞ்சா வேட்டை தீவிரம்; 5 மாதங்களில் 476 பேர் அதிரடி கைது: போலீஸ் நடவடிக்கைக்கு சிவகாசி மக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: