சத்தியமங்கலம், ஜூன் 12: ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த மே 26 ஆம் தேதி முதல் தடப்பள்ளி வாய்க்கால் மற்றும் அரக்கன் கோட்டை வாய்க்கால் பாசனப்பகுதிகளில் உள்ள 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. பவானி ஆற்றில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 950 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பாசன பகுதிகளில் பரவலாக லேசான மழை பெய்வதால் பவானி ஆற்றில் தண்ணீர் திறப்பு 950 கன அடியிலிருந்து 550 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மழை நிலவரத்தை பொறுத்து தண்ணீர் திறப்பில் மாற்றம் இருக்கும் என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று மாலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 83. 05 அடியாகவும், நீர் இருப்பு 17.3 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 2043 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 550 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும் என மொத்தம் 555 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
The post பாசனப் பகுதிகளில் பரவலாக மழை: பவானி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு appeared first on Dinakaran.