தமிழ்நாட்டில் 97% மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி: ஆய்வில் தகவல்


சென்னை : தமிழ்நாட்டில் நோய் எதிர்ப்பு சக்தி 97 சதவீதமாக உயர்ந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநகரத்தில் சிக்கலுள்ள கர்ப்பங்களுக்கான சிகிச்சை வழிகாட்டுதல்கள் பயிற்சி கருத்தரங்கை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் மகப்பேறு மரண விகிதத்தை குறைப்பதற்கும், குழந்தைகளுக்கான மரண விகிதத்தை குறைப்பதற்கும் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மகப்பேறு காலங்களில் தாய்மார்களின் மரணம் என்பது 2021-22ம் ஆண்டில் 1 லட்சம் பிறப்புகளுக்கு 90.5 ஆக இருந்தது, அது தற்போது 39.4 ஆக குறைந்திருக்கிறது.

2020ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது, நோய் எதிர்ப்பு சக்தி மக்களிடத்தில் எந்த அளவிற்கான சதவிகிதத்தில் இருக்கிறது என்று ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்தவகையில் 32 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி மக்களிடத்தில் காணப்பட்டது. அதன்தொடர்ச்சியாக 2021ம் ஆண்டு 29 சதவீதம் அளவிற்கு மட்டுமே இருந்தது. பிறகு கோவிட் பாதிப்பு, தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. பல்வேறு உணவு கட்டுப்பாடுகள், உடற்பயிற்சி போன்ற காரணங்களில் 70 சதவீதம் அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்திகள் இருந்தது. 4 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு 2021 இறுதியில் 87 சதவீத மக்களுக்கு அதாவது கொரோனா பெருந்தொற்று காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றிருக்கிறார்கள் என்கின்ற உண்மைகள் கண்டறியப்பட்டிருக்கிறது.

அதனை தொடர்ந்து 1214 வயது மூத்தவர்களிடமிருந்து மாதிரிகள் எடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது 97 சதவீதம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருக்கும் நிலையில் இதுமாதிரியான வீரியமற்ற கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது பெரிய அளவில் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண்தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாட்டில் 97% மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி: ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: