* ஆதரவு திரட்டும் அன்புமணிக்கு செக் வைக்க புதிய வியூகம்
* பரபரப்பு தகவல்கள்
பத்து மாவட்டங்களில் பாமக பொதுக்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பை அன்புமணி வெளியிட்டிருந்த நிலையில் பாமக பொதுக்குழுவை கூட்டுவதற்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாசும் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன. பாமக உட்கட்சி விவகாரம், குடும்ப வாரிசுகளுக்கு பதவி வழங்குவது, தேர்தல் கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணி இடையே கடந்த 5 மாதங்களுக்கு மேலாக அதிகார மோதல் நீடித்து வருகிறது. இதனால் கட்சி தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டு, செயல் தலைவராக நியமித்தார். கட்சியின் தலைவராக நானே செயல்படுவேன் என அறிவித்தார். இதையடுத்து இருவரும் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். தொடர்ந்து, அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், பாமக பொருளாளர் திலகபாமா, மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர நிர்வாகிகள், வன்னியர் சங்க நிர்வாகிகள் என அடுத்தடுத்து நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்து ராமதாஸ் அதிரடி காட்டினார்.
ஆனால், நீக்கி நிர்வாகிகள் மீண்டும் நியமனம் செய்து அன்புமணி உத்தரவிட்டார். இதனால் பாமகவில் மூத்த நிர்வாகிகளை ராமதாஸ் மற்றும் அன்புமணியை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து, கடந்த 5ம் தேதி தைலாபுரத்துக்கு சென்ற அன்புமணி, ராமதாசை சந்தித்து பேசினார். அப்போது ராமதாஸ், கட்சி செயல் தலைவராகதான் நீடிக்க வேண்டும், வாரிசுகளுக்கு பதவி வழங்குவதல் உள்ளிட்ட 5 நிபந்தைகளை விதித்தார். இதற்கு அன்புமணி ஒப்புகொள்ளாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, பாஜ தூதரான ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி இருவரும் ராமதாசை சந்தித்து சுமார் 3 மணி நேரம் பேசினர். அப்போது, அன்புமணியுடன் சமரசமாகி பாஜவுடன் கூட்டணி வைக்க வேண்டும். இல்லையென்றால் அன்புமணி மீது உள்ள சிபிஐ வழக்கை தூசி தட்டி எடுக்கப்படும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதன்பின் சென்னை வந்த குருமூர்த்தியை, ரகசியமாக அன்புமணி சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, அவசர அவசரமாக சென்னைக்கு வந்த ராமதாஸ் 3 நாட்கள் தங்கி பாஜ தூதர் ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி மற்றும் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தினார். ஆனால், பாஜ தூதர விதித்த நிபந்தனை ஏற்க மறுத்து ராமதாஸ் சில நிபந்தனைகளை விதித்தார். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் கூட்டணி முடிவு குறித்து 3 மாதத்தில் தெரியவரும் என கூறிவிட்டு 9ம்தேதி இரவு தைலாபுரத்துக்கு ராமதாஸ் சென்றார். இந்த பேச்சுவார்த்தையால் நிர்வாகிகள் நீக்கம், நியமனத்தை ஒத்திவைத்திருந்த ராமதாஸ், நேற்று முன்தினம் மட்டும் ஒரேநாளில் சமூக நீதி பேரவை மாநில தலைவராக இருந்த வழக்கறிஞர் பாலு மற்றும் 15 மாவட்ட செயலாளர்கள், 13 மாவட்ட தலைவர்களை தடாலடியாக மாற்றி அறிவித்தார்.
தைலாபுரத்தில் ராமதாஸ் நேற்று முன்தினம் அதிரடிகளை நிகழ்த்திக் கொண்டிருந்த அதே சமயத்தில் சென்னையில் அன்புமணி, கட்சியின் தலைவர் என்ற முறையில் பொதுக்குழு கூட்ட அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். 10 வருவாய் மாவட்டங்களில் ஜூன் 15ம் தேதி (ராமதாஸ் பிறந்தநாள்) முதல் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். இந்த கூட்டங்களில் அனைத்து அமைப்பின் நிர்வாகிகளும் கலந்து கொள்ள உத்தரவிட்டிருந்தார். இந்த கூட்டங்களில் அன்புமணி தலைவர் பதவியில் நீடிப்பது தொடர்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், ராமதாஸ் பிறந்தநாள் அன்று நடைபயணத்தை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்ட அன்புமணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக ராமதாசும் பொதுக்குழுவை கூட்டும் நோக்கத்தோடுதான் அன்புமணி ஆதரவாளர்களை அதிரடியாக நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.
அன்புமணியை செயல்தலைவராக மாற்றிய பிறகு, இதுவரையிலும் மொத்தம் 55 மாவட்ட செயலாளர்கள், 33 மாவட்ட தலைவர்களை ராமதாஸ் புதிதாக நியமித்துள்ளார். சமீபத்தில் மாமல்லபுரத்தில் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு அன்புமணி தலைமையில் அவரது ஏற்பாட்டின்பேரில் நடந்தது. இதன்மூலம் கட்சி தன் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை அவர் நிரூபித்தார். ராமதாஸ் தைலாபுரத்தில் கூட்டிய நிர்வாகிகளின் கூட்டங்களில், பங்கேற்க அவர் முட்டுக்கட்டை போட்டதாகவும் உள்கட்சியில் குற்றச்சாட்டு எழுந்தன. தற்போது தந்தை- மகன் மோதல் உச்சகட்ட நிலையை எட்டிய நிலையில் பூம்புகாரில் நடக்க உள்ள மகளிர் மாநாட்டை அன்புமணி துணை இல்லாமல், தனது தலைமையில் சிறப்பாக நடத்தி காட்டி, கட்சி முழுமையாக தன் பக்கம்தான் என நிரூபிக்க ராமதாஸ் முடிவு செய்துள்ளார். இதன் காரணமாகவே அவர் வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழியை மாநாட்டு தலைவராக அறிவித்திருப்பதாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டிவிட்டு பின்னர் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி தனது பலத்தை நிரூபிக்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது பாஜக- அதிமுக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கும்பட்சத்தில் கூடுதலாக சீட்டுகளை, அதிகார பதவிகளை கேட்டு பெற முடியும் எனவும் ராமதாஸ் கருதுவதாக கூறப்படுகின்றன. இதனால்தான் கட்சிப் பணிகளில் தற்போது தீவிரமாக அவர் இறங்கி விட்டதாக முன்னணி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், நேற்றும் 6 மாவட்ட செயலாளர்கள், 6 மாவட்ட தலைவர்கள் மற்றும் பல்வேறு நிர்வாகிகளை நீக்கி, புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்து உள்ளார். தந்தை-மகன் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் நிர்வாகிகள் நீக்கம், நியமனம் போட்டி தொடர்கிறது. நேற்று முன்தினம் சமூக நீதி பேரவை மாநில தலைவராக இருந்த வழக்கறிஞர் பாலுவை நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டு இருந்த நிலையில், அவர் அதே பதவியில் தொடர்வார் என அன்புமணி அறிவித்து உள்ளார்.
அன்புமணி பதவி, பொதுக்குழு கூட்டம் : ராமதாஸ் இன்று முக்கிய அறிவிப்பா?
தைலாபுரம் தோட்டத்தில் வராந்தோறும் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்திப்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் வாடிக்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில் தனது பேட்டியின்போது இதை சுட்டிக்காட்டி பேசிய அவர், இனிப்பான செய்திகளைதான் அன்றையதினம் தருவேன் என தெரிவித்திருந்தார். கடந்த 29ம்தேதி கண்கலங்கியபடி அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க, கட்சியினருக்கு கசப்பு மருந்தாக அமைந்தது. இதனால் அதற்கடுத்த வியாழக்கிழமையான (5ம்தேதி) செய்தியாளர்கள் சந்திப்பில் கட்சி தொடர்பான முக்கிய தகவல் தெரிவிப்பார் என கட்சியினர் எதிர்பார்த்திருந்த நிலையில் அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோரின் அடுத்தடுத்த சந்திப்பால் பிரஸ் மீட்டை தவிர்த்தார். ராமதாஸ் அப்செட்டில் இருப்பதாக மூத்த நிர்வாகிகள் அன்றைய தினம் தெரிவித்தனர்.
பிறகு சென்னைக்கு திடீரென பயணம் மேற்கொண்ட ராமதாஸ், 9ம்தேதி தைலாபுரம் திரும்புவேன், மறுநாள் (10ம்தேதி) செய்தியாளர்களை சந்திப்பதாக கூறிவிட்டு புறப்பட்டார். ஆனால் நேற்று முன்தினம் நிர்வாகிகள் மாற்றங்கள் தொடர்பான தகவல்கள் மட்டுமே செய்தியாளர்களுக்கு வந்தன. பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. இந்த நிலையில் இன்று (12ம்தேதி) வியாழக்கிழமையாக இருந்தாலும், அன்புமணியுடன் மோதல் முற்றியுள்ளதால் வழக்கம்போல் செய்தியாளர்களை ராமதாஸ் சந்திப்பாரா அல்லது தவிர்ப்பாரா? என்ற கேள்வி கட்சியினரிடம் எழுந்துள்ளது. அப்படி சந்திக்கும்பட்சத்தில் அன்புமணி நீக்கம், கட்சியின் பொதுக்குழு, எதிர்கால நலன், மகளிர் மாநாடு, கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வரலாம் என தெரிகிறது.
பணத்துக்காக அய்யாவை மறந்து போனியே…. பாலு நீயொரு ச்சீ, ச்சீ, சீ…
* பாட்டுப்பாடி பதவி வாங்கிய கோபு
* சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கான வீடியோ
சமூக நீதி பேரவை மாநில தலைவராக இருந்த வழக்கறிஞர் பாலுவை நேற்று முன்தினம் நீக்கம் செய்து, அந்த பொறுப்புக்கு சென்னையை சேர்ந்த துணை செயலாளர் பதவியிலிருந்த கோபு நியமிக்கப்பட்டார். பதவி நீக்கம் செய்த பாலுவை விமர்சித்து, அந்த பதவிக்கு புதுசா நியமிக்கப்பட்ட கோபு பாடிய பாடல் சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டாகி வருகின்றன. கோபு பாடிய பாடல் பின்வருமாறு:
பணத்துக்காக அய்யாவை மறந்து அவர்கூட போனியே,
குலசாமி அய்யாவை மறந்து அவர்கூட போனியே,
அவருக்கு வயசாகிடிச்சி என்று சொல்லி அவர்கூட போனியே,
அய்யாவால இனி என்னதேறும்முன்னு அவர்கூட போனியே,
அய்யா நீச்சல் குளத்தில் குளிக்கிற நேரத்தில அவர்கூட போயிட்டியே,
குளிச்சி முடித்து மூஞ்ச துடைக்கும்போது பனையூர் போயிட்டிருந்தியே,
ச்சீசீ, ச்சீசீ, நீயொரு ச்சீசீ… …
என்று அந்த பாடலில் வரிகள் இடம்பெற்றிருந்தன.
கோபி பாடிய பாடல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 1ம்தேதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கோபுவின் இந்த பாடல்தான் அவருக்கு சமூக நீதி பேரவை தலைவர் பதவியை வழங்கியதாகவும் தைலாபுரம் தோட்டத்து வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன.
இதுஒருபுறமிருக்க பாட்டுபாடி பதவி வாங்கிய கேலிக்கூத்து பாமகவில்தான் நடப்பதாக மறுபுறம் விமர்சனங்களும் வலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ராமதாஸ் நியமனமே செல்லும் திலகபாமா மீது சட்ட நடவடிக்கை: புதிய பொருளாளர் உசேன்
திருப்பூர் மாவட்டத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு கலைக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களுக்கான பொறுப்புகளை நேற்று அறிவித்த ராமதாஸ், அதற்கான நியமன கடிதங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாமக புதிய பொருளாளர் சையத் மன்சூர் உசேன் கூறும்போது, பாமகவில் நிறுவனர் ராமதாசின் நியமனம் மட்டுமே செல்லும். அவருக்கு மட்டுமே முழு அதிகாரம். உள்ளது. திலகபாமா பொருளாளர் என குறிப்பிட முடியாது. அவர் மீது சட்டப்படியான நடவடிக்கையை ராமதாஸ் எடுப்பார் என்றார்.
நீங்கள் நீக்கும் முன் நானே விலகுகிறேன்…பசுமை தாயக மாநில நிர்வாகி விலகல்; ராமதாசுக்கு பரபரப்பு கடிதம்
பசுமை தாயகம் அமைப்பின் மாநில இணைச்செயலாளர் சத்ரிய சேகர் தனது முகநூலில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ராமதாஸ் என்னை நீக்குவதற்கு முன்பாக நானே விலகிகொள்கிறேன். உங்களது செயல்களால் பல லட்சக்கணக்கானோர் உங்கள் மனதில் இருந்து விலகிய நிலையில் நீங்கள் நீக்கும் முன்பாக நானாக உங்களிடம் இருந்து விலகிக் கொள்கிறேன். அன்புமணி தலைமையில் எதிர்காலத்தில் ஆளும் அதிகாரத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியை கொண்டு செல்வோம். பெற்ற மகனுக்கு, ஒரே ஒரு செல்ல மகனுக்கு மிகவும் திறமையான அன்புமணிக்கே இந்த நிலை என்றால் நாங்கள் எல்லாம் எம்மாத்திரம். வக்கீல் பாலு உள்ளிட்ட இந்த கட்சியை வலுவாக்கிட உதவிய எத்தனையோ தலைவர்கள், மாவட்ட செயலாளர்களை நீக்கும் போது நாங்கள் எல்லாம் சாதாரணம். சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக உங்களுடன் பயணம் செய்த நான் மீதம் உள்ள நாட்களையும் கடந்து செல்வேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 6 மாவட்ட செயலாளர்கள்; 6 மாவட்ட தலைவர்கள் மாற்றம்: பல்வேறு ஒன்றியங்களில் கூண்டோடு நீக்கம்
தைலாபுரத்துக்கு திருப்பூர், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று வந்தனர். அவர்களிடம் ராமதாஸ் சிறிதுநேரம் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்து அடுத்தடுத்து அறிவிப்புகளை ராமதாஸ் வெளியிட்டார். நேற்றைய தினம் வரையிலும் 49 மாவட்ட செயலாளர்கள், 27 மாவட்ட தலைவர்கள் அக்கட்சியின் நிறுவனரால் மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். நேற்று மேலும் 6 மாவட்ட செயலாளர்கள், 6 மாவட்ட தலைவர்களை நீக்கி ராமதாஸ் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். இதன்மூலம் மொத்தம் 55 மாவட்ட செயலாளர்கள், 33 மாவட்ட தலைவர்கள் பாமகவில் மாற்ற, செய்யப்பட்டுள்ளனர்.
புதிய மாவட்ட செயலாளர்கள்:
1. திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளராக வேணு பாஸ்கரன் நியமனம்.
2. திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளராக வெங்கடாசலம் நியமனம்.
3. திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளராக ராஜேந்திரன் நியமனம்
4. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக மணிக்கண்ணன் நியமனம்
5. நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சுதாகர் நீக்கப்பட்டு உமா சங்கர் நியமனம்.
6. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளராக ஜெயமுருகன் நியமனம்.
புதிய மாவட்ட தலைவர்கள்:
1. திருவாரூர் வடக்கு மாவட்ட தலைவராக பி.எஸ்.பழனி நியமனம்.
2. திருப்பூர் மேற்கு மாவட்ட தலைவராக பழனிச்சாமி நியமனம்.
3. திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவராக ரங்கநாதன் நியமனம்.
4. திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவராக சரவணன் நியமனம்.
5. திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக கோவிந்தராஜ் நியமனம்.
6. சேலம் மேற்கு மாவட்ட தலைவராக செந்தில் நியமனம்.
இதில் திருப்பூர் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் பதவி கடந்த ஓராண்டாக்கு முன்பே முறைகேடு புகார்களின் எதிரொலியாக கூண்டோடு நீக்கப்பட்டு காலியாக இருந்த நிலையில் தற்போது அப்பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சையத் மன்சூர் உசேன் பாமக மாநில பொருளராக பதவியேற்றுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்களுக்கு பதவிகளில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவர்களை தவிர திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் மாநில இளைஞர் சங்கத் துணைத் தலைவராகவும், திருப்பூர் வடக்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளராக ராஜமாணிக்கமும், கடலூர் தெற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளராக ராஜசேகரும், கடலூர் தெற்கு மாவட்ட அமைப்புச் செயலாளராக இரா.சேகரையும் ராமதாஸ் புதிய நிர்வாகிகளாக அறிவித்துள்ளார்.
இதேபோல், கரூர் மாவட்ட துணை செயலாளராக ராஜா, வன்னியர் சங்க செயலாளராக ரமேஷ், கரூர் மாவட்ட கொள்கை விளக்க அணி துணைச் செயலாளராக பால பிரசாத், துணைத் தலைவராக ராஜேஷ்கண்ணன், அமைப்புச் செயலாளராக சதீஷ் குமார், அமைப்பு தலைவராக முருகன், கடவூர் ஒன்றிய செயலாளராக பழனிசாமி, கரூர் மாவட்ட தமிழ்நாடு உழவர் பேரியக்க மாவட்ட செயலாளராக தங்கவேல், கரூர் மாவட்ட பாட்டாளி இளைஞர் சங்க தலைவராக யாதவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் திருவெண்ணைநல்லூர், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், குமராட்சி, திருமுட்டம், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் ஒன்றிய செயலாளர்களை கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.
முடியாத தந்தை-மகன் மோதல்: அப்செட்டில் மூத்த நிர்வாகிகள்
பாமகவில் தந்தை, மகன் இருவருமே கட்சியை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர வேண்டும் என்பதில் அதிகார போட்டா- போட்டியுடன் முனைப்பு காட்டி வருவதால் நிர்வாகிகள், தொண்டர்கள் விரக்தியில் உள்ளனர். அதேவேளையில் சமரச முயற்சிகளை மேற்கொண்டு அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்ததால் மாநில கவுரவ தலைவர் ஜிகே மணி, முன்னாள் மாநில தலைவர் தீரன், பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், ராமதாசின் மூத்த மகள் காந்திமதி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் என்ன செய்வதென்று தெரியாமல் அப்செட்டில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.
The post இதுவரை 55 மாவட்ட செயலாளர்கள், 33 மாவட்ட தலைவர்கள் நீக்கம்: பாமக பொதுக்குழுவை கூட்ட தயாராகும் ராமதாஸ்: தொடரும் நிர்வாகிகள் அதிரடி மாற்றம் appeared first on Dinakaran.