2026ல் கூட்டணி ஆட்சிதான்; அதிமுக, பாமக பிரச்னையில் பாஜ தலையிடுவது தவறில்லை: சொல்கிறார் டிடிவி


புதுக்கோட்டை: 2026ல் கூட்டணி ஆட்சிதான். அதிமுக, பாமக உட்கட்சி பிரச்னையில் பாஜ தலையிடுவது தவறில்லை என்று டிடிவி.தினகரன் தெரிவித்து உள்ளார். புதுக்கோட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கீழடியில் பல்வேறு தொன்மையான பொருட்கள் கிடைத்தாலும் அதன் காலம் உள்ளிட்டவற்றை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டும். அதை தான் ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார். பிளவுபட்ட அதிமுகவை ஓரணியில் கொண்டு வர அமித்ஷா முயற்சி செய்தார். அது அப்போது சாத்தியமாகவில்லை. அதே சமயம் 2026 தேர்தலில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரையும் ஓரணியில் இணைக்கும் அமித்ஷாவின் முயற்சி இப்போது வெற்றி பெற்றுள்ளது.

அதனால் தேர்தலில் உறுதியான வெற்றி கிடைக்கும். தமிழ் கடவுள் முருகனுக்கு மாநாடு நடத்துவதில் தவறில்லை. 2026ம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையப்போவது உறுதி. இது கூட்டணி ஆட்சியாகவும், கூட்டணி அமைச்சரவையாகவும் இருக்கும். இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகள் அனைத்தும் இருக்கும். பாமக பிரச்னையில் பாஜ தலையிடுவதில் தவறு இல்லை. ஏனென்றால் 2024ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜவோடு, பாமக கூட்டணி வைத்தது. கூட்டணி கட்சி என்ற முறையில் பாஜ தலையிடுவதில் தவறில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post 2026ல் கூட்டணி ஆட்சிதான்; அதிமுக, பாமக பிரச்னையில் பாஜ தலையிடுவது தவறில்லை: சொல்கிறார் டிடிவி appeared first on Dinakaran.

Related Stories: