நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகளின் செயலை பொறுத்துக்கொள்ள முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பு

சென்னை: நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் செயலை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சத்யா ஸ்டுடியோ அருகில், நீர் நிலை புறம்போக்கு என்று வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் கட்டிடம் கட்டி வசித்து வந்த செல்வி என்பவரை காலி செய்யுமாறு மயிலாப்பூர் தாசில்தார் கடந்த மார்ச் மாதம் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செல்வி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாரயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ. ரவீந்திரன், ஆக்கிரமிப்பாளரான மனுதாரருக்கு மாற்று இடத்தில் வீடு வழங்க தயாராக உள்ளோம். அதற்கு குடும்ப உறுப்பினர்கள் பயோ மெட்ரிக் பதிவுகளை வழங்கி இடத்தை காலி செய்தால் உடனடியாக புதிய வீட்டிற்கான சாவி ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், நீர் நிலைகளை ஆக்கிரமித்து வசிப்பதை அங்கீகரிக்க முடியாது. மனுதாரர் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து காலி செய்ய வேண்டும். எதிர்காலத்தில் வேறு எந்த ஆக்கிரமிப்பும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் முறையாக செயல்படுவதில்லை என்பது நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. அதிகாரிகளின் இந்த செயலற்ற தன்மையை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது எனக்கூறி, செல்வியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

The post நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகளின் செயலை பொறுத்துக்கொள்ள முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: