செம்பட்டிவிடுதி அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராமமக்கள் சாலை மறியல்

 

புதுக்கோட்டை, ஜூலை 30: புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் ஊராட்சி கரையப்பட்டி பகுதி மக்களுக்கு ஒருவாரமாக குடிநீர் வழங்கப்படவில்லையாம்.

இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம். இந்நிலையில், உடனே குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கரையப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்துசென்ற, செம்பட்டிவிடுதி போலீஸார், ஊராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: