கேரள கடல் பகுதியில் 2வது கப்பல் விபத்து குமரி கடலோர பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம் அதிகரிப்பு

நாகர்கோவில்: எம்எஸ்சி எல்சா 3 கப்பல் விபத்தை தொடர்ந்து மற்றுமொரு கப்பல் நடுக்கடலில் எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் குமரி மாவட்ட கடலோர பகுதியில் சுற்றுச்சூழல் ஆபத்து அபாயம் அதிகரித்துள்ளது. லிபரியா கொடியுடைய எம்எஸ்சி எல்சா 3 சரக்கு கப்பல் மே 24ம் தேதி கேரளாவின் கொச்சி கடற்கரையில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் சாய்வு ஏற்பட்டு, கப்பலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மே 25 முழுமையாக மூழ்கியது. கப்பலில் 640 கன்டெய்னர்கள் இருந்தன. இதில் 13 கன்டெய்னர்களில் ஆபத்தான பொருட்களும், 12 கன்டெய்னர்களில் கால்சியம் கார்பைடு (நீருடன் வினைபுரிந்து வெடிக்கக்கூடிய பொருள்) இருந்தன. மேலும், கப்பலில் 84.44 மெட்ரிக் டன் டீசல், 367.1 மெட்ரிக் டன் எரிபொருள் எண்ணெய் இருந்தது.

கப்பல் மூழ்கியதையடுத்து, சிறிய அளவிலான எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இந்திய கடலோர காவல் படை, டோர்னியர் விமானங்களைப் பயன்படுத்தி எண்ணெய் கசிவை கட்டுப்படுத்தி வருகிறது. சுமார் 100 கன்டெய்னர்கள் கடலில் மிதந்து, ஆலப்புழா, கொல்லம், திருவனந்தபுரம், எர்ணாகுளம், கன்னியாகுமரி கடற்கரைகளில் கரை ஒதுங்கின. இவற்றில் பிளாஸ்டிக் துகள்கள், பாலித்தீன், கால்சியம் கார்பைடு உள்ளிட்ட ஆபத்தான பொருட்கள் இருந்தன. இது மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு வழிவகுத்தது. அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம், கடலில் மிதக்கும் கன்டெய்னர்களை மீட்கவும், கடற்கரை சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் செயல்படுகிறது.

கேரள அரசு இந்த சம்பவத்தை ‘மாநில குறிப்பிட்ட பேரிடர்’ என அறிவித்து, எம்எஸ்சி நிறுவனத்திடம் இழப்பீடு மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு கோருவதற்கு உயர்மட்டக் குழு அமைத்துள்ளது. கன்னியாகுமரி கடற்கரையிலும் பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் ஆபத்தான பொருட்கள் கரை ஒதுங்கியதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.  இதனால் கடல் மாசுபாடு மற்றும் மீனவர் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்ட கடற்கரை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த கப்பல் மூழ்கிய பாதிப்புகள் அடங்கும் முன்னர் மற்றொரு கப்பல் தீ பிடித்து எரிந்து கண்டெய்னர்கள் கடலில் விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள கடற்கரையில் சிங்கப்பூர் கொடியுடைய எம்வி வான்கய் 503 என்ற சரக்கு கப்பலில் ஜூன் 7ம் தேதி அன்று கொழும்பிலிருந்து புறப்பட்டு, மும்பை நோக்கி செல்லும் வழியில், கோழிக்கோடு பேய்பூர் கடற்கரையில் இருந்து 130 கடல் மைல் தொலைவில் நேற்று கண்டெய்னர் வெடிப்பால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்திய கடற்படை, கடலோர காவல் படையினர் இணைந்து 18 பணியாளர்களை மீட்டனர்.

மீட்கப்பட்டவர்களில் சிலர் காயமடைந்து, மங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. இந்திய கடலோர காவல் படை பல கப்பல்களை அனுப்பி தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த தீ விபத்தால் கன்னியாகுமரி கடல் பகுதியில் நேரடியாக பாதிப்பு ஏற்பட்டதற்கான உறுதியான தகவல்கள் இல்லை. இருப்பினும், 100 டன் பங்கர் ஆயில் கப்பலில் உள்ளதால் கடற்கரை பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இந்திய கடல்சார் சேவை மையம் அறிவித்துள்ளது.

மேலும் கப்பலில் உள்ள கண்டெய்னர்கள் 3 நாளில் கடலில் மிதக்க வாய்ப்பு உள்ளது என்றும், தொடர்ந்து இவை கரை பகுதியை அடைய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எல்சா கப்பலில் உள்ள பொருட்கள் ராமேஸ்வரம் கடற்கரை பகுதி வரை சென்றுள்ள நிலையில் இந்த கப்பலில் இருந்தும் பொருட்கள் குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் வந்து சேர வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. தற்போது வரை 50 கண்டெய்னர்கள் கடலில் விழுந்துள்ளது. இவை கடல் நீரோட்டத்தில் இழுத்துவர வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

The post கேரள கடல் பகுதியில் 2வது கப்பல் விபத்து குமரி கடலோர பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: