சட்டம் ஒழுங்கை சீரமைக்க வசதியாக 39 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் நடவடிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த வசதியாக, 39 டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கொலை, கொள்ளைகள் நடந்தன. குற்றவாளிகளை போலீசார் உடனடியாக கைது செய்தாலும், சம்பவங்கள் தொடர்ந்து வந்தன. இதனால், தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். அதில் தவறு செய்கிறவர்கள் மீது தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்தநிலையில், தமிழகம் முழுவதும் 39 டிஎஸ்பிக்களை அதிரடியாக மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:
சென்னை எம்.கே.பி.நகர் உதவி கமிஷனராக இருந்த மணிவண்ணன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி டிஎஸ்பியாவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த காவியா திருச்சி மாவட்டம் மணப்பாறை டிஎஸ்பியாகவும், தஞ்சை மாவட்டம் பெண்களுக்கு எதிரான குற்ற புலனாய்வு பிரிவு-11 டிஎஸ்பியாக இருந்த ராதாகிருஷ்ணன் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியாகவும், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் டிஎஸ்பியாக இருந்த சபாபதி எழும்பூர் ரயில்வே டிஎஸ்பியாகவும், தீவிரவாத தடுப்பு பிரிவில் இருந்த பண்டாரசாமி சென்னை சிறப்பு பிரிவு சிஐடி டிஎஸ்பியாகவும், சென்னை திருமங்கலம் உதவி கமிஷனராக இருந்த பிரம்மானந்தன் திருச்சி விமான நிலைய குடியேற்ற பாதுகாப்பு பிரிவு சிஐடி டிஎஸ்பியாகவும், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் டிஎஸ்பியாக இருந்த மாயவன் சென்னை சைபர் க்ரைம் பிரிவு டிஎஸ்பியாகவும், திருத்தணி டிஎஸ்பியாக இருந்த கந்தன் திருவள்ளூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், தமிழகம் முழுவதும் மொத்தம் 39 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு டிஜிபி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை டிஎஸ்பியாக இருந்த சண்முகசுந்தரம், வாலிபர் அஜித்குமார் அடித்துக் கொள்ளப்பட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காலியாக இருந்த அந்த இடத்துக்கு பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல தமிழகம் முழுவதும் டிஎஸ்பிக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை திறம்பட கையாளாத அதிகாரிகள் பலரும் இந்த மாற்றத்தில் இடம்பெற்றுள்ளனர்.

The post சட்டம் ஒழுங்கை சீரமைக்க வசதியாக 39 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: