சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம்: நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்


தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் அருகே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தஞ்சை புன்னைநல்லூர் அருகே நாகை சாலையில் இருந்து கத்தரிநத்தம், குளிச்சப்பட்டு, வாளமர்கோட்டை செல்லும் சாலை உள்ளது. நீர்நிலைகள், விளைநிலங்கள் என எழில்மிகு தோற்றத்துடன் இந்த வழிப்பாதை காணப்படுகிறது. கிராமப்பகுதியை சேர்ந்தவர்கள், கிராம பகுதி மக்கள் என பலதரப்பட்ட மக்களும் இந்த வழிப்பாதையை ரசித்தபடி சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மேற்கண்ட சாலையோரத்தில் கோழி இறைச்சி கழிவுகள், இறந்த கால்நடைகளின் உடல்களை கொட்டிச்செல்கின்றனர். இதனால் சாலையோரம் முழுவதும் இறைச்சி கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. நாய்கள் கூட்டம், கூட்டமாக வந்து இறைச்சி கழிவுகளை தின்று செல்கின்றன.

இறைச்சி கழிவுகள் நிறைந்து கிடப்பதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் என அனைவரும் அந்த வழியாக மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். மேற்கண்ட பகுதியில் நாளுக்கு நாள் இறைச்சி கழிவுகளை கொட்டிச்செல்லும் வழக்கம் அதிகரித்து வருகிறது. குவிந்து கிடக்கும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்து கிடக்கும் இறைச்சி கழிவுகள், கால்நடைகளின் உடல்களை அகற்றவும், சாலையோரத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம்: நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: