கிராம உதவியாளர்களை தேர்வு செய்ய புதிய விதிமுறைகள்: அரசாணை வெளியீடு

சென்னை: கிராம உதவியாளர்களை தேர்வு செய்ய புதிய விதிமுறையை வெளியிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை செயலாளர் அமுதா நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கிராம உதவியாளர் பணிக்கான சிறப்பு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வருவாய்த்துறை செயலரின் கருத்துருவை பரிசீலித்த தமிழக அரசு, கிராம உதவியாளர் பணி நியமனத்துக்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக வழிமுறைகளை வகுத்துள்ளது.

அதன்படி, கல்வித்தகுதியில், எஸ்.எஸ்.எல்.சியில் தமிழ் ஒரு பாடமாக கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும். மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர் எஸ்.எஸ்.எல்.சியில் தேர்வு பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். இருசக்கர மோட்டார் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருந்தால் அதற்கு தேர்வு நடத்த தேவையில்லை. மிதிவண்டி அல்லது மோட்டார் வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருந்தால் தேர்வு நடத்தப்பட வேண்டும்.

இதற்கு 10 மதிப்பெண் வழங்கப்படும். தமிழ் வாசிக்கும், எழுதும் திறன் பெற்றிருந்தால், திறனுக்கேற்ப 30 மதிப்பெண் வரை வழங்க வேண்டும். நேர்காணல் குழுவின் முன் வாசித்து, எழுதிக்காட்ட வேண்டும். சம்பந்தப்பட்ட கிராமத்தில் வசிப்பவராக இருந்தால் 35 மதிப்பெண் அல்லது, தாலுகா எல்லைக்குள் வசிப்பவராக இருந்தால் 30 மதிப்பெண் வழங்கப்படும். நேர்காணல், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், பிற தனி வட்டாட்சியர் ஆகியோரை கொண்ட குழுவினரால் நடத்தப்படும். இதற்கு 15 மதிப்பெண் வழங்கப்படும்.

விண்ணப்பதாரரின் ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கு ஏற்ப குறைந்த பட்சம் 6, அதிகபட்சம் 12 மதிப்பெண் வரை வழங்கலாம். எக்காரணத்தை கொண்டும் 6 ஐ விட குறைவாகவோ, 12 ஐவிட அதிகமாகவோ மதிப்பெண் வழங்கக்கூடாது. கிராம உதவியாளர் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் முறையாக உரிம விதிகள்படி வெளியிடப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் மேற்பார்வையிட வேண்டும். தேர்வு முறை உரிய விதிகள்படி நடைபெற்றுள்ளதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்த பின், தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டும். இந்த விதிகளை மீறினால், அனைத்து அலுவலர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

The post கிராம உதவியாளர்களை தேர்வு செய்ய புதிய விதிமுறைகள்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: