பி.எஸ்.4 ரக வாகனம் விதிகளை மீறி பதிவு செய்த சென்னை ஆர்டிஓ அலுவலர்கள் மீது வழக்கு: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை

சென்னை: சென்னையில் 2020ம் ஆண்டுக்கு பின் விதிகளை மீறி பி.எஸ்.4 ரக வாகனங்கள் பதிவு செய்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மீது உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு பி.எஸ்.4 வாகனங்கள் சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஒன்றிய அரசு சார்பில் தடைசெய்யப்பட்டன. ஆனால் தடை சட்டத்திக்கு பிறகு 2020ம் ஆண்டுக்கு பின்னும் பி.எஸ்.4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், பி.எஸ்.4 ரக வாகனங்களை பதிவு செய்த அதிகாரிகள் மீது மாநகர போலீஸ் கமிஷனர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். விசாரணை நிலை குறித்த அறிக்கையை ஜூன் 6ம் தேதி (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை தொடர்ந்து, பி.எஸ்.4 ரக வாகனங்களை 357 சட்ட விதிகளுக்கு எதிராக பதிவு செய்த சென்னையில் பணியாற்றிய வட்டார போக்குவரத்து அலுவலர்கள், ஆர்டிஓ ஒப்பந்த ஊழியர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பான அறிக்கையும் இன்று நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சார்பில் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் குறித்த விவரங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

The post பி.எஸ்.4 ரக வாகனம் விதிகளை மீறி பதிவு செய்த சென்னை ஆர்டிஓ அலுவலர்கள் மீது வழக்கு: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: