மேட்டுப்பாளையத்தில் தாயால் கைவிடப்பட்ட குட்டி யானை முகாமில் வளர்க்க முடிவு

*வனத்துறையினர் தகவல்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியான குமரன் சாலையில் தாயை பிரிந்த நிலையில் சுமார் 10 மாதங்களே ஆன ஆண் குட்டி யானை கடந்த மாதம் 26ம் தேதி வனத்துறையினரால் மீட்கப்பட்டு அங்குள்ள வேட்டைத்தடுப்பு காவலர் முகாமில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

மீட்கப்பட்ட அன்று யானை சற்று உடல்நலம் குன்றி சோர்வுடன் காணப்பட்டது. இதனையடுத்து கோவை வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் குட்டி யானைக்கு உடல் சோர்வை போக்கும் வகையில் குளுக்கோஸ், தர்பூசணி, இளநீர் மற்றும் வனப்பகுதியில் இயற்கையாக கிடைக்கும் புற்களை வழங்கினர்.

அதனை தொடர்ந்து, தற்போது அந்த குட்டி யானை பூரண உடல் நலத்துடன் சுறுசுறுப்பாக சுற்றி வருகிறது. இந்த யானையை அதன் தாயுடன் சேர்க்க வனத்துறையினர் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டும் இதுவரை தாய் யானை தென்படவில்லை.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,‘குட்டி யானையின் தாயை கண்டுபிடிக்க டிரோன் மூலம் வனப்பகுதியில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், 8 தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டும் அந்த குழுவினரும் தீவிரமாக தேடி வருகின்றனர். எனினும், தற்போது வரை தாய் யானை தென்படவில்லை.

எனவே, அதனை பொள்ளாச்சி டாப்சிலிப் கோழிக்கமுத்தி முகாம் அல்லது முதுமலை யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று விட முடிவு செய்து அதற்கு உயர் அதிகாரிகள் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். ஒப்புதல் கிடைத்தவுடன் அதனை மேற்கண்ட முகாம்களில் ஏதேனும் ஒன்றுக்கு அனுப்பி வைத்து அதனை பராமரிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post மேட்டுப்பாளையத்தில் தாயால் கைவிடப்பட்ட குட்டி யானை முகாமில் வளர்க்க முடிவு appeared first on Dinakaran.

Related Stories: