திண்டுக்கல்: அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு, அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், டாஸ்மாக் பணியாளர்களை இஎஸ்ஐ திட்டத்தில் இணைக்கவேண்டும். பணியாளர்களின் பணி ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு பின்னர் மாநிலத் தலைவர் பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் 30 ஆயிரம் பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டாஸ்மாக் விற்பனையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க ‘என்ட் டூ என்ட்’ திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதிலும் பல்வேறு இடர்பாடுகள் பணியாளர்களுக்கு ஏற்படுகிறது. இதை களைய புதிய கணினி மென்பொருளை உருவாக்க வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை இதுவரை எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. இதன் மூலம் அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது என்பது தெளிவாகிறது’’ என்றார்.
The post அமலாக்கத் துறையை அரசியல் கருவியாக்குகிறது ஒன்றிய அரசு: டாஸ்மாக் சங்க தலைவர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.