இதனிடையே, தேசிய புலனாய்வு முகமை, அரம்பை தெங்கோல் குழுவின் தலைவர் கொருங்கன்பா குமன் மீதான வழக்கு உட்பட பல வழக்குகளை விசாரித்து வருகிறது. இன ரீதியாக மாநிலம் பிளவுபட்டுள்ளதால், எந்த சமூகத்தைச் சேர்ந்த சந்தேக நபர்களைக் கைது செய்ய முயன்றாலும், இரு சமூகத்தினரிடமிருந்தும் கடும் எதிர்ப்பை போலீஸ் அதிகாரிகள் எதிர்கொள்கின்றனர். இந்தச் சூழலில், மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நேற்று இரவு திடீர் போராட்டங்கள் வெடித்தன. மெய்தி தன்னார்வக் குழுவான அரம்பை தெங்கோல் அமைப்பின் தலைவர் கானன் சிங் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அக்குழுவின் உறுப்பினர்களான இளைஞர்கள் வீதிகளில் டயர்களை எரித்தும், கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கானன் சிங்கை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இம்பாலின் குவாகெய்தல் பகுதியில் துப்பாக்கிச் சூடு போன்ற சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். ஆளுநரின் உத்தரவுக்குப் பிறகு, தாங்கள் சட்டவிரோத மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டதாகவும், அதிகாரிகளின் பாதுகாப்பு உத்தரவாதத்தின் பேரில் தற்போது ஆயுதமின்றி இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். மேலும், கிராமப் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் மெய்தி கிராமங்களைத் தாக்கிய குக்கி போராளிகளை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே மணிப்பூர் அரசு நேற்று இரவு 11.45 மணி முதல் ஐந்து நாட்களுக்கு ஐந்து மாவட்டங்களின் எல்லைக்குள் இணையம் மற்றும் மொபைல் சேவைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தவுபல், பிஷ்ணுபூர் மற்றும் கக்சிங் ஆகிய மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
The post போராளி குழு தலைவரை கைது செய்த விவகாரம்; 5 மாவட்டங்களுக்கு இணைய சேவை துண்டிப்பு: மணிப்பூரில் மீண்டும் எழுந்த வன்முறையால் பதற்றம் appeared first on Dinakaran.