நெல்லையில் இன்று அதிகாலை திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை


நெல்லை: நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே கீழ முன்னீர்பள்ளம் கிராமத்தில் வசித்து வருபவர் செல்வசங்கர் (45). பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளர். இவரது மனைவி சரஸ்வதி, பாளையங்கோட்டை ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில், செல்வசங்கர், குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென பலத்த சத்தம் கேட்டுள்ளது. படுக்கையில் இருந்து எழுந்து வெளியே வந்து பார்த்தார். வீட்டின் முன்பு தீ எரிந்து கொண்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். அப்போதுதான், பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசில் செல்வசங்கர் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், முகத்தில் துணியை கட்டி கொண்டு 4 பேர் கும்பல் பைக்கில் வந்து இறங்குகிறார்கள். பின்னர் தாங்கள் கொண்டு வந்த பெட்ரோல் வெடிகுண்டில் தீயை பற்ற வைத்து செல்வகுமார் வீட்டில் வீசி விட்டு தப்பி செல்கிறார்கள்’ என்பது பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில், மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். செல்வசங்கர், கட்சி நிகழ்ச்சிகளுக்கு கொடிகள் கட்டும் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், அப்பகுதியில் உள்ள செல்லாயி அம்மன் கோயிலில் சாமியாடியாகவும் இருந்து வந்துள்ளார்.

முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நெல்லையில் இன்று அதிகாலை திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Related Stories: