இந்தூர்: கர்னல் சோஃபியா குறித்து சர்ச்சையாக பேசிய மத்திய பாஜக அமைச்சர் மன்னிப்பு கேட்ட நிலையில், அவருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய விமானப்படை மற்றும் ராணுவத்தின் வெடிகுண்டு அகற்றும் பிரிவு தலைவரான கர்னல் சோஃபியாவை, ‘பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சகோதரி’ என்று மத்தியப் பிரதேச மாநில பாஜக அமைச்சர் விஜய் ஷா சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். அரசியல் ரீதியாகவும், சமூக ஊடகங்களிலும் அவரை கடுமையாக பலரும் விமர்சித்தனர். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், ‘ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக கர்னல் சோஃபியா குரேஷி குறித்து நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.
சகோதரி சோஃபியாவை அவமதிப்பது குறித்து கனவிலும் நினைக்கவில்லை. இதற்காக நான் 10 முறை மன்னிப்பு கேட்கவும் தயாராக உள்ளேன். இந்த சம்பவம் நடந்ததிலிருந்து நான் மிகவும் வருத்தத்தில் உள்ளேன்’ என்று கூறினார். முன்னதாக பாஜக அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்தால், பாஜக தலைமை கடும் அப்செட்டில் உள்ளது. மேலும் பாஜக தலைமை கொடுத்த அழுத்தத்தால் தற்போது அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அமைச்சர் விஜய் ஷா மீது அளித்த்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் (பிஎன்எஸ்) பிரிவு 196, பிரிவு 351(2) கீழ் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post கர்னல் சோஃபியா குறித்து சர்ச்சை பேச்சு; மன்னிப்பு கேட்ட பாஜக அமைச்சர்: மத்திய பிரதேச போலீஸ் வழக்கு பதிவு appeared first on Dinakaran.