அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

புதுடெல்லி: ஆகம விதிகளுக்கு முரணாக கோயில்களில் அர்ச்சகர்கள் மற்றும் பிற ஆகம சம்பந்தப்பட்ட பணியாளர்களை நியமிக்கவோ அல்லது தேர்வு செய்யவோ சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உட்பட சில அமைப்புகள் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அர்ச்சகர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்கத் தலைவர் அரங்கநாதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில்,\\”அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஒரு அரசாணையை கடந்த 2006ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்தது. அந்த வகையில் அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சி மூலமாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போது வரை எந்த ஒரு பணி நியமனமும் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த உத்தரவால் தற்போது வரை அர்ச்சகர்கள் பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கானோர் பணி அமர்த்தப்படாமல் உள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

மேலும் இந்து அறநிலையத்துறை சட்டத்தின்படி அர்ச்சகர்கள் பயிற்சியை முடித்திருந்தால் அவர்களை பணி நியமனம் செய்யலாம் என்று விதி உள்ளது. ஆனால் முறையாக அர்ச்சகர் பயிற்சி பெற்றும் மூத்த அர்ச்சகர்கள் கீழ் கோயில்களில் பயிற்சி பெற்ற பின்னரும் அவர்கள் அர்ச்சகராக நியமனம் செய்யப்படாமல் உள்ளனர். எனவே முறையாக பயிற்சி பெற்ற எங்களை தகுதியின் அடிப்படையிலும், இந்து அறநிலையத்துறை நடத்திய தேர்வுகள் மற்றும் அதில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் பணி நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்கும் விதமாக இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடித்து உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க வேண்டும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கில் எங்களது தரப்பின் இந்த புதிய இடையீட்டு மனுவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

The post அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: