* உயர்கல்வி, வேலைவாய்ப்பு கேள்விக்குறி
* விழுப்புரம் ஆட்சியரிடம் மனு அளித்தனர்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே 3 ஆண்டுகளாக சாதிச்சான்றிதழ பெற காட்டுநாயக்கன் பழங்குடியின மக்கள் போராடி வருவதாகவும், இதனால் உயர்கல்வி, வேலைவாய்ப்புக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும், எனவே சாதிச்சான்றிதழை விரைந்து வழங்கக்கோரியும் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே ஆலம்புரவடை கிராமத்தை சேர்ந்த முருகன் உள்ளிட்ட காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பிள்ளைகளுக்கு சாதிச்சான்றிதழ் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில், நாங்கள் வேட்டைக்காரன்பட்டி, வளத்தி கிராமத்திலும், தொடர்ந்து ஆலம்புரவடை கிராமத்தில் தங்கி வசித்து வருகிறோம். எங்களின் பிள்ளைகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தேவைகளுக்காக எங்களின் இனமான இந்து காட்டுநாயக்கன் பழங்குடியினர் சாதிச்சான்று கேட்டு திண்டிவனம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தோம்.
கடந்த 3 ஆண்டுகளாக சாதிச்சான்று வழங்காமல் அலைக்கழிப்பு செய்துள்ளனர். பழங்குடியின ஆய்வு மைய இயக்குநர் மற்றும் மானுடவியல் வல்லுநர் இருப்பிடம், வாழ்வாதாரம், கலாச்சாரம் ஆகியவற்றை ஆய்வு செய்ய திண்டிவனம் சப்-கலெக்டர் உத்தரவிட்டு இதற்கான களவிசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி இந்து காட்டுநாயக்கன் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட 31 பேருக்கு சாதிச்சான்றிதழ் வழங்க பரிந்துரைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
எனவே ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குநர் மற்றும் மானுடவியல் அறிக்கையின்படி உரிய நடவடிக்கை எடுத்து இந்து காட்டுநாயக்கன் பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மேல்மலையனூர் அருகே 3 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் பெற போராடும் காட்டுநாயக்கன் மக்கள் appeared first on Dinakaran.