ரிஷிவந்தியம் : கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் நடைபெற்ற வாணாபுரம் வட்டத்திற்கான 1434ம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வருவாய்த் தீர்வாய அலுவலர், மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. பின்னர், அவர் தெரிவித்ததாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 7 வருவாய் வட்டங்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 1434ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி நேற்று தொடங்கி 27ம் தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களை தவிர்த்து ஏனைய நாட்களில் சம்பந்தப்பட்ட வட்டங்களுக்கான வருவாய்த் தீர்வாய அலுவலர்களால் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாணாபுரம் வட்டத்தில் 1434ம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்படி, வாணாபுரம் வட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று வடபொன்பரப்பி குறுவட்டத்திற்கு உட்பட்ட மூங்கில்துறைப்பட்டு, பொரசப்பட்டு, பொருவளூர், அருளம்பாடி, உலகலப்பாடி, வடபொன்பரப்பி, வடகீரனூர், பிரம்மகுண்டம், ராயசமுத்திரம், மேல்சிறுவள்ளூர், மணலூர், பவுஞ்சிப்பட்டு, பாக்கம், கடுவனூர் உள்ளிட்ட 14 வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் மேற்கண்ட 14 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், கணக்கு திருத்தம், நில அளவை, மின் இணைப்பு சான்று, சொத்து உரிமைச் சான்று, பட்டா ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 299 மனுக்கள் பெறப்பட்டு 68 மனுக்கள் ஏற்கப்பட்டு 231 மனுக்கள் விசாரணையில் உள்ளன.
மேலும் கிராம கணக்குகளும் சரிபார்க்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வருவாய்த் தீர்வாயத்தில் பெறப்படும் அனைத்து மனுக்களின் மீதும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வருவாய்த் தீர்வாய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
எனவே, பொதுமக்கள் வருவாய் துறை தொடர்பான கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண இம்முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்வில் வட்டாட்சியர் வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7 வருவாய் வட்டங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறலாம் appeared first on Dinakaran.