மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள குந்தா, பந்தலூர் வட்டங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க வலுக்கும் கோரிக்கை

ஊட்டி : பேரிடர் மற்றும் அவசர கால மீட்பு பணிகளை தாமதமின்றி துரிதமாக மேற்கொள்ள வசதியாக நீலகிரி மாவட்டத்தின் தொலைதூர பகுதிகளான குந்தா, பந்தலூர் வட்டங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வலுத்துள்ளது.

தமிழ்நாட்டின் சமவெளி பகுதிகளில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துைறயினர் தீயணைப்புத் துறையினர் மழை மற்றும் தீ விபத்து, மண் இடிந்து விழுந்து அதில் சிக்கியவர்கள் என அவ்வப்போது ஏற்படும் பேரிடரின் போது தான் அதிகமான மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டியிருக்கும்.

மலைப்பிரதேசங்களிலுள்ள தீயணைப்புத்துறையினரோ, எந்த நேரத்திலும் மீட்பு பணிகளில் ஈடுபட தயார் நிலையில் இருக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் பெருமழை, தீ, நிலச்சரிவு, மரம் விழுதல் என அனைத்து நேரங்களிலும் இரவு, பகல் பாராமல் தங்களுடைய பணியை திறம்பட செய்து, மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.

குறிப்பாக ஜூன் முதல் டிசம்பர் வரை நீடிக்கும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் 24 மணி நேரமும் தயார் நிலையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பகல் நேரமானாலும், நள்ளிரவானாலும் மரம் விழுதல், மண் சரிவு ஏற்பட்டால் மற்ற துறையினருடன் இணைந்து எவ்வித சுணக்கமுமின்றி மரங்களை வெட்டி அகற்றுதல், குடியிருப்புகளில் விழும் மண் திட்டுகளை அகற்றுதல் பணிகளை மேற்கொள்கின்றனர்.

இதுதவிர பிற சமயங்களில் கட்டுமான பணியின் போது மண் திட்டு இடித்து அதில் சிக்கி கொள்பவர்கள், குடியிருப்பு பகுதிகளில் புகக்கூடிய பாம்புகளை மீட்பது போன்ற பணிகளிலும் ஈடுபடுகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 6 வட்டங்கள் உள்ளன. இவற்றில் மாவட்ட தலைநகரமான ஊட்டியை தலைநகரமாக கொண்டு ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் கோத்தகிரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அமைந்துள்ளது.

மாவட்ட தீயணைப்பு அலுவலர் தலைமையில் நிலைய அலுவலர்கள், முன்னணி தீயணைப்போர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.

தீயணைப்பு நிலையங்கள் அமைந்துள்ள 4 வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு பணிகள், தீயணைப்பு மற்றும் இதர அவசர கால மீட்பு அழைப்புகள் வந்தால் உடனுக்குடன் கால தாமதமின்றி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொள்கின்றனர்.

அதே சமயம் தீயணைப்பு நிலையம் இல்லாத குந்தா வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏதேனும் அவசர அழைப்புகள் வந்தால் சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள ஊட்டி அல்லது குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்தும், பந்தலூர் வட்டத்தில் ஏதேனும் அவசர அழைப்புகள் என்றால் சுமார் 25 முதல் 30 கிமீ தொலைவில் உள்ள கூடலூரில் இருந்து தான் மீட்பு பணிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

இதனால் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு தாமதமாக செல்ல கூடிய சூழல் நிலவுகிறது. இதனால் மீட்பு பணிகள் மேற்கொள்வதிலும் சுணக்கம் ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு பேரிடர் மற்றும் அவசர கால மீட்பு பணிகளை தாமதமின்றி துரிதமாக மேற்கொள்ள வசதியாக நீலகிரி மாவட்டத்தின் தொலைதூர பகுதிகளான குந்தா, பந்தலூர் வட்டங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

50 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என விதிமுறை உள்ளது. மேற்கண்ட பகுதிகளில் போதுமான அளவு மக்கள் தொகை உள்ளது குறிப்பிடத்தக்கது.

குந்தா மற்றும் பந்தலூரில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் அரசுக்கு ஏற்கனவே கருத்துருக்களும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பகுதிகளில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள குந்தா, பந்தலூர் வட்டங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க வலுக்கும் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: