அப்போது சூர்யா, படுக்கை வசதி பெட்டியின் கீழ் இருக்கையில் தூங்கினார். அப்போது இரவு 1.30 மணியளவில் தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே ரயில் வந்தபோது, சூர்யாவிற்கு மேலே உள்ள மிடில் பெர்த்தில் தூங்கி கொண்டிருந்தவர் கீழே இறங்கியுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக சங்கிலி கழன்றுவிட்டதால் மிடில் பெர்த் கீழே படுத்திருந்த சூர்யா மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சூர்யா வலியால் அலறி துடித்தார். உடனே சூர்யாவின் கணவர் பெட்டியில் இருந்த டிக்கெட் பரிசோதகரை அழைத்து முதலுதவி சிகிச்சை அளிக்கும்படி கேட்டுள்ளார்.
ஆனால், ரயிலில் முதலுதவி சிகிச்சை பெட்டி இல்லாததால் சூர்யாவிற்கு எந்தவித சிகிச்சையையும் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜோதி, ரயில்வே அதிகாரிகளிடம், இத்தனை பேர் பயணம் செய்யும் ரயிலில் ஒரு முதலுதவி சிகிச்சை பெட்டி கூட இல்லையா? என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது. இதனையடுத்து, மொரப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கும்படி ரயில்வே அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. ஆனால், ரயில் நிலையத்தில் ஒரு ஆம்புலன்ஸ் வசதி கூட ஏற்பாடு செய்யவில்லை என கூறப்படுகிறது.
இதனால், இரவு நேரத்தில் நாங்கள் எப்படி ஆஸ்பத்திரி செல்வோம் என கூறி சூர்யா ரயிலில் இருந்து இறங்க மறுத்துவிட்டார். பின்னர், சேலம் ரயில் நிலையத்தில் இறங்கிய சூர்யா ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் சூர்யா வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூங்கி கொண்டிருந்த பெண்ணின் மீது ரயில் படுக்கை விழுந்த சம்பவம் ரயில் பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே நிர்வாகம் கூறியதாவது; சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மொரப்பூர் ரயில் நிலையத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், மொரப்பூர் ரயில் நிலையத்தில் அந்த பயணி இறங்க மறுப்பு தெரிவித்தார். பின்னர், சேலம் ரயில் நிலையத்தில் இறக்கி, பெண் பயணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து, சம்பவம் நடந்த பெட்டியில் இருக்கை அமைப்புகளை ரயில்வே அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் சங்கிலி இணைப்பு கொக்கியை பயணி சரியாக கையாளாததால் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
The post ஓடும் ரயிலில் மிடில் பெர்த் சரிந்து பெண் காயம்.. சங்கிலி இணைப்பு கொக்கியை சரியாக கையாளாததால் விபத்து: தெற்கு ரயில்வே விளக்கம்!! appeared first on Dinakaran.