இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகராட்சி பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணி தீவிரம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னையில் இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநகராட்சி பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் இரவிலும் பெண்கள் பாதுகாப்பாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் பதவி ஏற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் தினமும் பணிகளை ஆய்வு செய்து முடுக்கிவிட்டு வருகின்றனர். இதனால் சென்னை மாநகராட்சியில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சி சார்பில் 387 கி.மீ. நீளமுடைய 471 பேருந்து தட சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் வழியாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 31 பணிமனைகளில் இருந்து நாள்தோறும் 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் நாளொன்றுக்கு 30 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு மேல் பயன்பெற்று வருகின்றனர். இந்த வழித்தடங்களில் பொதுமக்களின் வசதிக்காக 1,363 பேருந்து நிழற்குடைகளை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது. பயணிகள் நிழற்குடைகளை சீரமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிழற்குடைகளை தூய்மையாக பராமரிக்க மாநகராட்சி சார்பில் கடந்த ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு டன் கணக்கில் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து பேருந்து நிறுத்துங்கள், வழித்தடங்கள் முழுவதுமாக சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி பேருந்து வழித்தடங்களில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், பேருந்து வழித்தடங்களில் தவறான இடங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களும் அகற்றப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சி பேருந்து நிறுத்தங்களில் உள்ள நிழற்குடைகளை சீரமைக்கும் பணிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது. சென்னை மாநகராட்சியில் உள்ள பேருந்து வழித்தட சாலைகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தீவிரத் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுழற்சி முறையில் நீர் தெளித்து சுத்தமாக பராமரிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இரவு நேரங்களில் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சென்னை மாநகராட்சியில் மின்விளக்கு இல்லாத இடங்களில் மின் விளக்குகள் அமைத்தல், தேவைப்படும் இடங்களில் கூடுதலாக மின் விளக்குகள் அமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சியில் 1 முதல் 15 வகையிலான அனைத்து மண்டலங்களிலும் உள்ள பேருந்து வழிதடங்களில் அமைந்துள்ள ஒவ்வொரு பேருந்து நிறுத்தங்களிலும் தலா இரண்டு எல்.இ.டி. மின் குழல் விளக்குகள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன், முதற்கட்டமாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பேருந்து வழித்தடங்களில் அமைந்துள்ள தெருவிளக்குகள் அருகில் உள்ள 685 பேருந்து நிறுத்தங்களில், சாலையோர மின் விளக்கு இணைப்புகளிலிருந்து பேருந்து நிறுத்தங்களில் தலா இரண்டு எல்.இ.டி. குழல் விளக்குகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 70 பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதரப் பகுதிகளில் தொடர்ந்து இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக சாலையோர விளக்குகள் அமையாத 210 பேருந்து நிறுத்தங்களில் புதிதாக மின் மீட்டருடன் மின் இணைப்புப் பெற்று மின்விளக்குகள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் மின்விளக்கு வசதி உள்ளிட்ட முழுமையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு நிறைந்த பேருந்து நிறுத்தமாக புதுப்பொலிவினைப் பெற்று திகழ்ந்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, மண்டலம் 1ல் 31 பேருந்து நிறுத்தங்களிலும், மண்டலம் 2ல் 16, மண்டலம் 3ல் 21, மண்டலம் 4ல் 64, மண்டலம் 5ல் 55, மண்டலம் 6ல் 106, மண்டலம் 7ல் 57, மண்டலம் 8ல் 67, மண்டலம் 9ல் 118, மண்டலம் 10ல் 49, மண்டலம் 11ல் 10, மண்டலம் 12ல் 13, மண்டலம் 13ல் 57, மண்டலம் 14ல் 7, மண்டலம் 15ல் 14 பேருந்து நிறுத்தங்களிலும் மின்விளக்கு அமைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் சென்னை மாநகராட்சி பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைப்பதன் மூலம் இரவு நேரங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு போதுமான வெளிச்சம் கிடைக்கும், இதனால் அதிக அளவு திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். மின்விளக்குகள் அமைப்பதன் மூலம் பயணிகள் பேருந்து நிற்கும் இடத்தை எளிதில் அடையாளம் காணமுடியும். பேருந்தின் வருகை மற்றும் புறப்பாட்டை தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். மின்விளக்குகள் அமைப்பதன் மூலம் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் பிரகாசமாக இருக்கும்.

பயணிகள் பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள வசதியாக இருக்கும். வெளிச்சமாக இருப்பதால் தேவையில்லாத கழிவுகள், குப்பைகள் கொட்டுவது, சிறுநீர் கழிப்பது போன்றவை தவிர்க்கப்படும். இதனால் சுற்றுச்சூழல் மேம்படும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மின்விளக்குகள் அமைப்பதன் மூலம் பயணிகள் பேருந்து நிற்கும் இடத்தை எளிதில் அடையாளம் காணமுடியும். பேருந்தின் வருகை மற்றும் புறப்பாட்டை தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

The post இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகராட்சி பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணி தீவிரம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: