இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், உபி மாநிலம் லக்னோவில் பிரமோஸ் ஏவுகணை உற்பத்தி மையம் திறப்பு விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் மூலம் பல குடும்பங்களின் குங்குமம் அழிக்கப்பட்டது. இதற்காக ஆபரேஷன் சிந்தூர் மூலம் தீவிரவாதிகளை இந்திய ராணுவம் தண்டித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் என்பது தீவிரவாதத்திற்கு எதிரான வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் செயலாக்கத்திற்கான அடையாளம். இதில் இந்திய ராணுவத்தின் வெற்றியை முழு நாடும் வாழ்த்துகிறது. இந்த நடவடிக்கை தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் வலுவான ராணுவ சக்தியின் திறனையும் உறுதியையும் நிரூபிக்கிறது.
தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்கும் போதெல்லாம், எல்லையை தாண்டி இருந்தாலும் கூட தீவிரவாதிகளுக்கும், அவர்களின் எஜமானர்களுக்கும் பாதுகாப்பானதாக இருக்காது என்பதை நாங்கள் காட்டி உள்ளோம். எல்லைக்கு அருகில் உள்ள ராணுவ தளங்களை மட்டுமின்றி, பாகிஸ்தானின் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டி வரையிலும் இந்திய படைகள் அச்சுறுத்தி உள்ளன. உரி தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது. புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாலகோட் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இப்போது பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தானுக்குள் நுழைந்து பல்வேறு தாக்குதலை நடத்தி உள்ளது. இந்தியாவில் தீவிரவாத நாசவேலைகள் செய்வதன் விளைவுகளை உலகம் முழுவதும் இன்று கண்டுள்ளது.
தீவிரவாதத்தை துளியும் சகித்துக் கொள்ளாத கொள்கையை பின்பற்றி, தீவிரவாதத்திற்கு எதிராக எல்லையின் இருபுறமும் கடுமையான நடவடிக்கை எடுக்கும் புதிய இந்தியா இதுதான் என்பதை பிரதமர் மோடி தெளிவுபடுத்தி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
பொதுமக்களை குறிவைத்த பாக்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மேலும் பேசுகையில், ‘‘பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத கட்டமைப்பை அழிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே இந்தியப் படைகள் ஆபரேஷன் சிந்தூரில் களமிறங்கின. நாங்கள் அவர்களின் பொதுமக்களை ஒருபோதும் குறிவைக்கவில்லை. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்தது மட்டுமல்லாமல், கோயில்கள், குருத்வாராக்கள் மற்றும் தேவாலயங்களையும் தாக்க முயன்றது’’ என்றார்.
பிரம்மோஸ் வலிமை என்ன? பாக்.கிடம் கேளுங்கள்
விழாவில் பேசிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், “பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்தது. அப்போது பிரம்மோஸ் ஏவுகணையின் வலிமையை நாடு பார்த்தது. ஆனால் அதன் வலிமையில் இன்னும் யாருக்கும் சந்தேகம் இருந்தால், பிரம்மோஸ் ஏவுகணையின் வலிமை பற்றி பாகிஸ்தானிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்” என அறிவுரை வழங்கினார்.
The post எல்லையில் மட்டுமல்ல ராவல்பிண்டி வரையிலும் இந்திய படைகள் தாக்கின: ராஜ்நாத் சிங் பெருமிதம் appeared first on Dinakaran.