மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் பலத்த காற்றுடன் மழை பெய்யும்

சென்னை: மேற்கு திசை காற்றின் மாறுபாடுகாரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அக்னி வெயில் என்னும் கத்திரி வெயில் தொடங்கி ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில், பகல் வெயில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வங்கக் கடல், இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் பகுதியில் உருவான காற்று ஒன்றாக இணையும் சூழ்நிலை ஏற்பட்டதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

இருப்பினும் பகல் நேரத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. மாலை இரவு நேரங்களில் இடியுடன் மழை பெய்கிறது. வெப்பநிலையை பொருத்தவரையில் இயல்பு நிலையில் இ ருந்து 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி, கரூர், மதுரை ராமநாதபுரம் மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை நேற்று அதிகரித்து காணப்பட்டது. சென்னை, நாகப்பட்டினம், திருப்பத்தூர், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட சற்று குறைந்துள்ளது.

இந்நிலையில், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் நேற்று 104 டிகிரி வெயில் கொளுத்தியது. வேலூர், திருத்தணியில் 102 டிகிரி, சென்னை, கடலூர், புதுச்சேரியில் 100 டிகிரி, சேலம், பரங்கிப்பேட்டை, கோவை மாவட்டங்களில் 99 டிகிரி வெயில் நிலவியது. இந்த சூழ்நிலையில், தெற்கு அந்தமான் கடல், நிகோபார் தீவு மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை முதல் தென் மேற்கு பருவமழை தொடங்க உள்ளது.

அதன் தொடர்ச்சியாக கேரளாவில் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென் மேற்கு பருவக் காற்று இரண்டு நாட்களுக்கு முன்னதாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், 13ம் தேதியில் நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

14 மற்றும் 15ம் தேதிகளில் மேற்கண்ட மாவட்டங்களுடன், நாமக்கல், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொருத்தவரையில் 13ம் தேதி வரையில் இயல்பு நிலையில் இருந்து 3 டிகிரி செல்சியஸ் வரையில்அதிகமாக இருக்கும். சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி வரை இருக்கும்.

The post மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் appeared first on Dinakaran.

Related Stories: