நெய்வேலி அனல் மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து: ரூ.1 கோடி பொருட்கள் சேதம்

நெய்வேலி: நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இன்று அதிகாலை டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. என்எல்சி திறந்தவெளி சுரங்கம் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது.

இந்நிலையில் அம்மேரி அருகில் உள்ள இரண்டாம் அனல் மின் நிலைய விரிவாக்கத்தில் இன்று அதிகாலை நேரத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ பரவியது. அப்போது அங்கிருந்த காப்பர் ஓயர் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இதனை அறிந்த என்எல்சி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர். அப்போது என்எல்சி அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் யாரும் அங்கு பணியில் இல்லாததால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து என்எல்சி உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் காப்பர் கம்பிகள் உள்ளிட்ட சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகி உள்ளதாக தெரிகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post நெய்வேலி அனல் மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து: ரூ.1 கோடி பொருட்கள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: