சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி பஞ்சாப் அணி வெற்றி

சென்னை: ஐபிஎல் 18வது தொடரின் 49வது லீக் போட்டி சென்னையில் நேற்று நடந்தது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சென்னை அணியின் ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே துவக்க வீரர்களாக களமிறங்கினர். சொதப்பலாக ஆடிய ஷேக் ரஷீத் (11 ரன்), ஆயுஷ் மாத்ரே (7 ரன்), அடுத்தடுத்து அவுட்டாகினர். சிறிது நேரத்தில் ரவீந்திர ஜடேஜா (17 ரன்) ஆட்டமிழந்தார்.

அதையடுத்து, சாம் கர்ரன், டெவால்ட் புரூவிஸ் இணை சேர்ந்தனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால், சென்னை அணி, 11.2 ஓவரில், 3 விக்கெட் இழப்புக்கு 100 ரன்னை எட்டியது. இந்நிலையில், அஸ்மதுல்லா வீசிய 15வது ஓவரில் புரூவிஸ் (26 பந்து, 32 ரன்), கிளீன் போல்டாகி வெளியேறினார். பின்னர், சாம் கர்ரனுடன் சிவம் துாபே இணை சேர்ந்தார். சூர்யன்ஷ் ஷெட்ஜ் வீசிய 16வது ஒவரில் சூறாவளியாய் சுழன்றடித்த கர்ரன், 2 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 25 ரன்களை வேட்டையாடினார்.

அதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்து, 160ஐ எட்டியது. தொடர்ந்து அதிரடி காட்டிய கர்ரன் (47பந்து, 4 சிக்சர், 9 பவுண்டரி, 88 ரன்), யான்சன் வீசிய 18வது ஓவரில், இங்கிலீசிடம் கேட்ச் தந்து வெளியேறினார். பின்னர், யுஸ்வேந்திர சஹல் வீசிய 19வது ஓவரில், தோனி 11 ரன், தீபக் ஹூடா 2 ரன்களிலும், அன்சுல் கம்போஜ், நுார் அகமது ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரின் 2வது பந்தில், கடைசி விக்கெட்டாக தூபே (6 ரன்) அவுட்டானார்.

அதனால், 190 ரன்களுக்கு சென்னை அணி ஆல் அவுட்டானது. அதையடுத்து, பஞ்சாப், 191 ரன் வெற்றி இலக்குடன் களமிறங்கியது. இதையடுத்து, களம் இறங்கிய பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 194 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. 8 போட்டிகளில் தோல்வியை தழுவியதால் ஐபிஎல் தொடரில் இருந்து முதல் அணியாக சென்னை வெளியேறியது.

The post சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி பஞ்சாப் அணி வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: