டெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 1931ம் ஆண்டுக்குப் பிறகு 2011ம் ஆண்டு சமூக பொருளாதார மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரமும் சேகரிக்கப்பட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட ஜாதிவாரி சமூக நிலை குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. 2021 ல் நடக்கவேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தன.
இந்நிலையில் அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து அறிவித்தார். அப்போது; தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். எதிர்வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி விவரங்களும் சேர்க்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு [சென்செஸ்] என்பது ஒன்றிய அரசின் பணியாகும்.
சில மாநிலங்களில் அரசியல் காரணங்களுக்காக சர்வே என்ற பெயரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு என விமர்சனம் செய்தார். சில மாநிலங்களில் ஜாதிவாரி சர்வே சரியாக நடந்தது; சில மாநிலங்களில் அரசியல் காரணங்களுக்காக நடந்தது. மக்கள்தொகை கணக்கெடுப்பிலேயே ஜாதிவாரி விவரங்கள் வெளிப்படையாக சேகரிக்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒன்றிய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு வெளிப்படையாக நடத்தப்படும் என்று கூறினார்.
பீகார் தேர்தலுக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பா?
மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும் என்று அறிவிக்காமல் ஜாதி விவரம் சேகரிக்கப்படும் என திடீர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான நிதி ஒதுக்கப்படவில்லை. நிதி ஒதுக்கப்படாத நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்| என அறிவித்துள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்க குறைந்தது 2 ஆண்டுகளாகும் என கூறப்படுகிறது.
The post தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.