அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னத்தை கேட்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை: தலைமை தேர்தல் ஆணைய விசாரணையில் மனுதாரர்கள் ஒட்டுமொத்தமாக வலியுறுத்தல்

புதுடெல்லி: இரட்டை இலை மற்றும் பொதுச்செயலாளர் வழக்கு சம்பந்தமான தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக ஆகிய உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க தடையில்லை என்று உத்தரவிட்டிருந்தது. மேலும் இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி, பொதுச்செயலாளர் ஆகிய விவகாரம் குறித்து சூர்யமூர்த்தி, புகழேந்தி, கே.சி.பழனிசாமி, ஓ.பி.ரவீந்திரநாத், ஓ.பன்னீர்செல்வம், ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் தனித்தனியாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக உட்கட்சி விவகாரம் ஆகியவை குறித்து தேர்தல் ஆணையத்தில் நேற்று விசாரணை நடந்தது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான சி.வி.சண்முகம் கூறுகையில், கட்சியில் இருந்து வெளியேறியவர்கள், நீக்கப்பட்டவர்கள் கொடுத்துள்ள மனுவை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். உள்கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்று வலியுறுத்தப்பட்டது என்று கூறினார். இதையடுத்து மனுதாரர்களான கே.சி.பழனிசாமி, வழக்கறிஞர்கள் ராம்குமார் ஆதித்தன், சூர்யமூர்த்தி மற்றும் புகழேந்தி ஆகியோர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி தொண்டர்களால், அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அனைத்து விதிகளையும் திருத்திதான் பொதுச்செயலாளராக ஆனார். எனவே அது அதிமுக அடிப்படை விதிகளுக்கு எதிரானது. மேலும் இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அரசியல் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்சியில் பிளவு ஏற்பட்டால் சின்னத்தை யாருக்கு கொடுப்பது என்பதை முடிவு செய்வது தான் சின்னம் ஒதுக்கீடு சட்டத்தின் 15ம் பத்தியில் உள்ளது. அதனடிப்படையில் விசாரணை நடைபெற்றது என்றனர். இதேப்போன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான அவரது மகன் ரவீந்திரநாத் கூறும்போது, அதிமுக, இரட்டை இலை விவகாரத்தில் ஈ.பி.எஸ்.க்கு எந்த அதிகாரமும் இல்லை. அ.தி.மு.க ஒருங்கிணப்பாளர் ஓ.பி.எஸ்தான் உண்மையான அ.தி.மு.க ஆவார். எனவே இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சி ஆகியவற்றை ஓபிஎஸ்.க்கு தான் ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்தோம் என்று கூறினார்.

 

The post அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னத்தை கேட்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை: தலைமை தேர்தல் ஆணைய விசாரணையில் மனுதாரர்கள் ஒட்டுமொத்தமாக வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: