காஷ்மீர் நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் ராஜ்நாத் சிங் விளக்கம்: எல்லையில் 4வது நாளாக பாக். அத்துமீறல்

புதுடெல்லி: காஷ்மீரில் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்ற பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்தாக்குதலுக்கு காரணமானவர்களும், சதித்திட்டம் தீட்டியவர்களும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக்கூறும் பாகிஸ்தான், எல்லையில் கடந்த 4 நாட்களாக இரவில் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இதற்கு இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சந்தித்து பேசினார். அப்போது காஷ்மீர் நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங் பிரதமர் மோடியிடம் விளக்கியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் பேசப்பட்ட விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானை எதிர்கொள்ள ராணுவம் எடுத்துள்ள முக்கிய முடிவுகள் குறித்து முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் நேற்று முன்தினம் ராஜ்நாத் சிங்கை சந்தித்து விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங் பிரதமர் மோடியை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

The post காஷ்மீர் நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் ராஜ்நாத் சிங் விளக்கம்: எல்லையில் 4வது நாளாக பாக். அத்துமீறல் appeared first on Dinakaran.

Related Stories: