*நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?
விழுப்புரம் : விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி ஏரிக்கரை சாலையின் இருபுறமும் முட்செடிகள் அடர்ந்து ஆக்கிரமித்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக பொதுமக்கள் தங்களது விளைபொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சாலை வசதிகள் கிராமத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக உள்ளது. நாட்டின் முதுகெலும்பாக பார்க்கப்படும் கிராமங்களின் வளர்ச்சிக்கு சாலைகள் இன்றியமையாதது. இதன் மூலம் மட்டுமே பொதுமக்கள் நகரப்பகுதிக்கு வந்து செல்லவும், தங்களது விளைபொருட்களை விற்பனை செய்யவும், கல்வி, தொழில், வேலை வாய்ப்புக்கு பெரும் முக்கிய பங்காக உள்ளது.
அதனை கருத்தில் கொண்டு ஒன்றிய, மாநில அரசுகள் சாலை பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்து இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் கிராம பகுதிகளில் அமைக்கப்பட்ட சாலைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பஞ்சமாதேவி ஏரிக்கரை பகுதியில் 1.200 கி.மீட்டர் தூரத்துக்கு தார் சாலை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை மூலம் இச்சாலை அமைக்கப்பட்டதன் மூலம் அருகில் உள்ள வடுவம்பலம், கள்ளிப்பட்டு, நரசிங்கபுரம், மடம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம பகுதி மக்கள் இச்சாலை வழியாக சிறுவந்தாடு, மடுகரை உள்ளிட்ட புதுச்சேரி மாநிலத்துக்கு செல்லக்கூடியதாக உள்ளது.
அது மட்டுமின்றி விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் கரும்பு, சவுக்கு உள்ளிட்ட விளைபொருட்களையும் இச்சாலை வழியாக கொண்டு செல்ல பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த சாலைகள் புதிதாக போடப்பட்டதோடு சரி. தொடர்ந்து பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது சாலையின் இருபுறமும் முட்செடிகள் அடர்ந்து ஆக்கிரமித்துள்ளதால் அகலமாக இருந்த சாலை குறுகியுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலையில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களையும் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுத்து சாலையை பராமரித்து முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி ஏரிக்கரை சாலையை இருபுறமும் ஆக்கிரமித்த முட்செடிகளால் பாதிப்பு appeared first on Dinakaran.