திருச்சி, ஏப்.28: வெயிலின் தாக்கத்தில் இருந்து கண்களை பாதுகாத்துக்கொள்ள, பணியில் இருக்கும் போலீசார் கண்டிப்பாக ‘கூலிங் கிளாஸ்’ அணிதல் வேண்டும் என திருச்சி சரக டிஐஜி வருண் குமார் போலீசாருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். திருச்சி நியூரோ ஒன் மருத்துவமனை மற்றும் பவுண்சர் சங்கம் சார்பில் போலீஸ துறை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு பக்கவாதம், வலிப்பு மற்றும் மூளை நரம்பியல் பிரச்சனைகளுக்கான இலவச மருத்துவ முகாம், திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை வளாகத்திலுள்ள திருமாங்கல்யம் மஹாலில் நேற்று நடந்தது.
முகாமை திருச்சி சரக டிஐஜி வருண்குமார் துவக்கி வைத்தார். முகாமில் திருச்சி சரக போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு குளிர் கண்ணாடி (கூலிங் கிளாஸ்) வழங்கப்பட்டது. கூலிங் கிளாஸ்களை வழங்கி டிஐஜி வருண்குமார் பேசியதாவது, போக்குவரத்து ஒழுங்கு பணியில் இருக்கும் போலீசார், வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்கள் கண்களை பாதுகாத்துக்கொள்வது அவசியம். எனவே அனைவரும் தவறாது கூலிங் கிளாஸ் அணிய வேண்டும். கூலிங் கிளாஸ் ஸ்டைலுக்கானது மட்டுமல்ல, தூசி மற்றும் வெயிலின் தாக்கத்தில் இருந்து நம் கண்களை பாதுகாக்கக்கூடியது என்றார்.
இந்த முகாமில் போலீசாருக்கு ரூ.2 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள EEG பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post ஸ்டைலுக்கானது மட்டுமல்ல கண்களை பாதுகாக்க பெரிதும் உதவக்கூடியது “கூலிங் கிளாஸ்’’ திருச்சி சரக டிஐஜி போலீசாருக்கு அறிவுரை appeared first on Dinakaran.