சென்னை: முட்டுக்காடு பகுதியில் 37.99 ஏக்கரில் சர்வதேச கண்காட்சிகள் மற்றும் பன்னாட்டு கூட்டங்கள் நடத்திடும் வகையில் நவீன வசதிகளுடன் உலகத்தரத்தில் ‘கலைஞர் பன்னாட்டு அரங்கம்’ அமைக்கப்படும் என கடந்த 2023ம் ஆண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, ரூ.525 கோடி மதிப்பீட்டிலான திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மாநாட்டு கூடம், 10,000 பேர் பார்வையிடும் வசதி கொண்ட கண்காட்சி அரங்கம், கூட்ட அரங்குகளுக்கான அரங்கம் ஆகியன அமைய உள்ளன. இந்த பன்னாட்டு அரங்கத்தில் திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், சுமார் 10,000 வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்த வசதிகள், சாலை வசதி, நுழைவு வாயில், சுற்றுச்சூழல் வசதி என அனைத்து வசதிகளுடன் உலகத் தரத்தில் அமைக்கப்பட உள்ளது.
இந்த அரங்கம் அமைக்கும் பணியை 2025ம் ஆண்டு இறுதியில் அல்லது 2026ம் ஆண்டு தொடக்கத்தில் முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தற்போதைய பணிகளின் நிலை தொடர்பாகவும் கூடுதலாக மேற்கொள்ளப்பட்ட வேண்டிய பணிகள் குறித்தும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். மேலும், அதிகாரிகளிடம் பணிகளின் நிலைகள் குறித்து விவாதித்தார். இந்த ஆய்வின்போது, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள், தலைமை பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
The post முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு appeared first on Dinakaran.